சிறப்புக்கட்டுரை: பெரியார் – வரையறுக்க இயலாத சகாப்தம்

 

சிறப்புக்கட்டுரை: பெரியார் – வரையறுக்க இயலாத சகாப்தம்

பெரியார் எந்த வரையறைக்குள்ளும் வரையறுக்க இயலாத ஒரு சகாப்தம். இன்றைக்கு சமூக செயற்பாட்டாளர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் அஸ்திவாரம் பெரியாரின் கொள்கைகளே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

– ரு.ஈ.முத்து சங்கர்

பெரியார் எந்த வரையறைக்குள்ளும் அடக்க இயலாத ஒரு சகாப்தம். இன்றைக்கு சமூக செயற்பாட்டாளர்களின் செயல்பாடுகளுக்கெல்லாம் அஸ்திவாரம் பெரியாரின் கொள்கைகளே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பொதுவாக பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்பவர்கள் பெரியாரையே விமர்சனப்படுத்தி அதன் மூலம் பகுத்தறிவைத் தேடி கொள்பவர்களாக இருப்பார்கள். அதை பெரியாரே குறிப்பிடுகிறார், “யார் சொல்லி இருந்தாலும், எங்கு சொல்லியிருந்தாலும், நானே சொன்னாலும் உனது புத்திக்கும், பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே என்று”…

பெரியார் தன் கொள்கைகளை பறைசாற்றியதோடுமட்டுமில்லாமல் அதன்படி வாழ்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது சுய வாழ்க்கையே அதற்கு மிகப்பெரிய உதாரணம். பெரியாரின் சமூக விடுதலையின் மிக முக்கிய அங்கம் பெண் விடுதலை. அவரது பெண்ணிய பார்வைதான் இன்றைய காலகட்டத்திற்கு தேவை என்று தோன்றுகிறது.

kialaan

இந்த பொது சமூகத்தில் பெண் என்பவள் ஒரு போகப்பொருளாகவே பாவிக்கப்பட்டு இருக்கிறாள். இங்குள்ள சடங்குகளும், சம்பிரதாயங்களும் தான் அவளை பின்னிப்பிணைந்து இந்த பொதுச் சமூகத்தில் சுதந்திரமாக இருக்கவிடாமல் தொடர்ந்து தடுத்துல்கொண்டே வந்த வண்ணம் உள்ளது. இதையெல்லாம் வேரறுக்க நினைத்தவர்தான், அந்த ஈரோட்டுக் கிழவர். சமூக விடுதலையின் கருவி பகுத்தறிவு மட்டுமே அதை அன்றைய காலத்தில் சரிவர செய்தவர் பெரியார் மட்டும் தான்.

periyar

வள்ளுவப்பெருந்தகை மீது அனைவருக்கும் ஒரு மரியாதை உண்டு சிறுவயது முதல் பள்ளிப் பருவம் முடிய தமிழ் பாடத்தில் திருக்குறளை மனப்பாடம் செய்த அனைவருக்கும் தெரியும் திருவள்ளுவர் யார் என்று, திருக்குறள் என்னவென்று. அந்நூல் உலகப் பொதுமறை என ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நூல் ஆனால் பெரியாரின் பெண்ணிய பார்வை அந்த உலகப் பொதுமறையையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.

thiru

1928-ம் ஆண்டு குடியரசு நாளிதழில் பெரியார் திருக்குறளில் உள்ள அதிகாரம் 6 வாழ்க்கைத் துணைநலம் மற்றும் அதிகாரம் 91, பெண் வழிச் சேரல் ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொள்ள முடியாது இதில் ஆணாதிக்க சிந்தனையும், சரிசம உரிமை இல்லை என்றும் வாதத்திற்கு உட்படுத்துகிறார்

பெரியார் கற்பு எனும் கட்டுரையில் 

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”  இந்த திருக்குறளை சுட்டிக்காட்டி… இது பெண்ணடிமைச் சிந்தனை என்று குறிப்பிடுகிறார். அதாவது பிற தெய்வத்தை வணங்காமல் கணவனை மட்டும் வணங்கும் பெண் பெய் என்று சொன்னால் மழை பெய்யுமாம் இது அந்த குறளின் கருத்து. கடவுளை வணங்கினால் மழை பெய்யுமா? என்பது ஒருபுறம் இருக்க, கணவனை மட்டுமே வணங்கும் பெண்  சொன்னால் மழை பெய்யும் என்பது அறிவுக்கும், அறிவியலுக்கும் சற்றும் ஒவ்வாத கருத்து. பெரியார் பெண்ணிய சிந்தனைகள் இந்த இரு அதிகாரங்களையும் விமர்சிக்க தயங்கவில்லை, காரணம் பெண் விடுதலையில் அவர் வைத்திருந்த நாட்டமும், அறிவும்தான்.

kannagi

கற்புக்கரசி கண்ணகி பிறந்த நாடு என்று வர்ணிக்கும் இந்த சமூகத்தில் கற்பு இரு பாலருக்கும் சமம் என்று வரையறுத்தவர் பெரியார். இங்கே கற்பு என்றால் அனைவருக்கும் சற்றும் தயக்கமின்றி நினைவுக்கு வருவது பெண்கள் மட்டும்தான். இந்த கற்பு என்ற சொல் பெண் என்பவளுக்கு விலக்க முடியாத தனித்துவம் பெற்ற சொல்லாகவே உள்ளது, அவளுக்கென்றே வடிவமைக்கப்பட்டது போல். ஆனால் பெரியார் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

peri

“உண்மையாக பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒரு பிறப்புக்கு ஒரு நீதி வழங்கும் நிர்பந்த கற்புமுறை ஒழிந்து இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சை கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காக பிரியமற்ற இடத்தை கட்டி அழுது கொண்டிருக்க செய்யும்படியான நிர்பந்த கல்யாணம் ஒழிய வேண்டும் என்கிறார்”  அதாவது ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதி என்று இல்லாமல் இருபாலருக்கும் ஒரே நீதியாக இருக்க வேண்டும், இருந்தால் மட்டுமே கற்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும் என்கிறார். 

ivera

பல்வேறு புராண இதிகாசங்களும் பெண்களை ஒரு போகப்பொருளாகவே சித்தரிக்கிறது. அதனால்தான் பெரியார் புராண இதிகாசங்களை எரிக்க சொல்லி இருப்பார் என்று நான் நினைக்கிறேன். தமிழறிஞர்கள் தமிழ் இலக்கியத்தை போற்றி வந்த நேரத்தில்தான் இந்த புராண இதிகாசங்களால் ஒன்றும் பயனில்லை என்றார். தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இலக்கியங்கள் தேவையில்லை; மொழி பேச்சு வழக்கில் இருந்தால் மட்டும் போதும். பெண்ணடிமை பேசும் எதுவும் நமக்கு தேவையில்லை என்பது எனது கருத்து.

urimai

பெரியார் பெண்ணை எல்லா துறைகளிலும் முன்னேற்ற வேண்டும் என்று உணர்ந்தார். சுயமரியாதை திருமணம், வேலைவாய்ப்பு, சொத்தில் சம உரிமை, விதவை மறுமணம் என அவர் அடுக்கிக் கொண்டே போகிறார். அவர் அறிவிற்கு தோன்றி, பேசி, எழுதியதெல்லாம் இன்று சட்டமாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவரது பகுத்தறிவு மட்டும்தான். 

thanthai

“கும்மி, கோலாட்டங்களை ஒழித்துவிட்டு, ஓடவும், குதிக்கவும், தாண்டவும், கைக்குத்து, குஸ்தி முதலியவைகளையும் சொல்லிக்கொடுத்து ஒரு ஆண் பிள்ளைக்கு உள்ள பலம், தைரியம், உணர்ச்சி, ஆகியவை பெண்களுக்கும் உண்டாகும்படி செய்ய வேண்டும்” என்று 85 வருடத்திற்கு முன் முதன்முதலில் ஒலித்தது பெரியார்தான்.

பெரியாரின் பகுத்தறிவுக்கு உட்படாத பெண்ணியம் பேசும்  பெண்ணியத்தில் மீள் பார்வை தேவைப்படுகிறது, ஏனென்றால் வீட்டில் மதிப்பு இல்லை, ஊரில் மரியாதை இல்லை, நாட்டில் பாதுகாப்பு இல்லை, சில நேரங்களில் கோவிலில் அனுமதி இல்லை,புனித நதிகளுக்கு இவள் பெயராம் – ஆனால்  இவள் சில நேரங்களில் புனிதமற்றவளாம் தெரிந்தால் கூறுங்கள் அன்பர்களே எது புனிதம் என்று?

ivva

ஆண்டாள் காதலித்தால் பள்ளியறைக்கு அனுப்புவார்கள் கவுசல்யா, பவானி, திவ்யா என்றால் கல்லறைக்கு அனுப்பவும் அஞ்சமாட்டார்கள். புறந்தள்ளப்படுவாள் ஒடுக்கப்படுவாள் வஞ்சிக்கப்படுவாள் வன்புணரப்படுவாள். ஒருபடி சென்று கொல்லவும்படுவாள். ஆனாலும் நாம் பெண்கள் தினத்தை வெறும் நாட்களில் மட்டுமே கொண்டாடி வருகிறோம். என்றைக்கு பெண்களை கொண்டாடப் போகிறோம் என்று தெரியவில்லை.

பெரியார் இருந்து, அவர் விமர்சித்த காலகட்டம் வேறு அறிவியல் தொழில்நுட்பம், நாகரீச்கம் என்று வளர்ந்து இன்று நாம் அவரது கருத்தை பேசினால் நமது குரல்கள் எங்கிருந்தோ வந்து நசுக்கப்படும் ஒரு சூழல் இருக்கிறது என்றால் பெரியார் இன்றும் நம்மூடே பயணித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் அர்த்தம். 

perusu

ஈ.வெ.ராமசாமி என்ற பெயர் அனைவரும் அறிந்தாலும் பெரியார் என்னும் பெயர் பொதுச் சமூகத்தில் பரவலாக இருக்கிறது என்றால் அதற்கு காரணம் ஒரு பெண் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆம் டாக்டர் அம்பேத்கரால் தன் தங்கை என்று அழைக்கப்பட்டவரும், பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடிய வீரமங்கை அன்னை மீனாம்பாள்தான் நவம்பர் 20,1938-ம் ஆண்டுதமிழகப் பெண்கள் மாநாட்டில் ஈ வெ ராமசாமிக்கு பெரியார் என்னும் பெயரைச் சூட்டினார். 

thanatha

அவரது பெண்ணிய சிந்தனைதான் பெண் சமூக விடுதலை சிந்தனை என்று நினைக்கிறேன். பெரியார் அனைத்திற்கும் ஒருபடி மேலே போய் “பெண்கள் விடுதலை அடைய வேண்டுமென்றால் ஆண்மை அழிய வேண்டும்” என்றார். அதாவது ஆண்மை எனும் ஆணவம் அழியும் போதுதான் பெண்ணடிமைத்தனமும் அழியும். ஆம் இது ஆண்மை எனும் ஆணவமும், ஆணாதிக்க சிந்தனையும் ஒழிக்கப்பட வேண்டிய காலம், ஒடுக்குமுறை கலாச்சாரம் உடைத்தெறியப்பட வேண்டிய காலம்.