சிறப்புக்கட்டுரை: தமிழகத்தில் இந்த தாமரைதான் என்றும் மலர்ந்திருக்கும்!!

 

சிறப்புக்கட்டுரை: தமிழகத்தில் இந்த தாமரைதான் என்றும் மலர்ந்திருக்கும்!!

தமிழ் சினிமா பாடல் வரிகள் ஆண்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் தாமரை.

விக்ரம்

தமிழ் சினிமா பாடல் வரிகள் ஆண்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துவந்த காலகட்டத்தில் பாடல் எழுத வந்தவர் தாமரை. ஒரு பெண்ணுக்கு இந்த சினிமா வட்டாரத்தில் வாய்ப்பு கிடைக்குமா? கிடைத்தாலும் வெல்ல முடியுமா? என்றுதான் அப்போதைய காலகட்டத்தில் அனைவரிடத்திலும் பரவலான கேள்வியாக இருந்தது. சீமானின் இனியவளே திரைப்படத்தில் பாடல் எழுத வாய்ப்பை பெற்ற தாமரை அதில் தென்றல் எந்தன் நடையை கேட்டது என்ற பாடலை முதன்முதலாக எழுதினார். முதல் பாடலிலேயே இரவுகள் என்னிடம் கண் மை கேட்டது என்று புதிய பாணியில் எழுதினார்.

அதனையடுத்து மல்லிகை பூவே மல்லிகை பூவே பார்த்தாயா என்ற பாடல் மூலம் தாமரை பாடலாசிரியர்கள் வரிசையில் இணைந்தார். ஆனால் அவரை தமிழகம் முழுவதும் அறிய செய்தது, மின்னலே திரைப்படத்தில் இடம்பெற்றவசீகரா என் நெஞ்சினிக்கபாடல்தான். தமிழ் திரைப்பாடல்கள் அதுவரை பெண்களை வர்ணித்து தீர்த்து கொண்டிருந்தது. ஆனால் தாமரை மை சிந்திய பிறகுதான் ஆண்கள் வசீகராக்களாக மாறினார்கள்

thamarai

ஒரு காதலி சாதாரணமாக காதலனிடம் எதிர்பார்ப்பது ஒன்றுதான். காதலன் எங்கும் போகாமல் தன்னுடனே இருக்க வேண்டும் என்பதுதான் அது. அது இயலாத ஆசைதான். இருந்தாலும் இயலாததை முடித்து காண்பிப்பதுதானே காதல். அதுவரை எந்த காதலியும் இந்த ஏக்கத்தை பொதுவெளியில் வைத்ததில்லை. ஆனால் தாமரையின் பேனா வந்துதான்எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்என காதலிகளின் ஏக்கத்தை எழுதியது. அதே பாடலில்தினமும் நீ குளித்ததும் எனை தேடி என் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதைஎன நாம் மனதிற்குள் நினைத்தாலே மழை அடிக்கும் வரிகளை பொழிந்திருப்பார். மின்னலே படத்தில் ஒவ்வொரு பாடலிலும் தாமரை பேனா ஒட்டுமொத்த காதலையும் எழுதி தீர்த்தது.

இதனையடுத்துதான் தமிழ் சினிமாவில் அரிதாக உருவாகும் இயக்குநர்இசையமைப்பாளர்பாடலாசிரியர் இணையும் மேஜிக்குளில் ஒன்றான கௌதம்ஹாரிஸ்தாமரை மேஜிக் நிகழ்ந்தது. அவர்களது மேஜிக் செய்தது எல்லாம் காதலில் உருகி, காதலில் இறுகி, காதலில் தொலைந்து, காதலை பெருக்குவது. அதற்கு ஹாரிஸின் ட்யூன் உடல் என்றால் தாமரையின் வரிகள் உயிர். கௌதமின் காட்சியமைப்புகள் உடைகள் எனவும் கொள்ளலாம்.

thamarai

இவர்கள் இணைந்து மின்னலே என்ற ஆல்பம் ஹிட்டை கொடுத்துவிட்டார்கள். அதற்கு அடுத்து வந்ததுகாக்க காக்க”. இதிலும் தாமரை தனது காதல் மேஜிக்கை செலுத்தி இருப்பார். காதலி காதலனிடம் தனது ஆசைகளை கூறி முடிப்பதற்கு இந்த யுகம் போதாது. வார்த்தைகள் போதாது. ஆம் காதல் பெரிது என்றால் அதைவிட பெரிது தன் துணையிடம் நாம் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று தனது நெஞ்சுக்குள் பொதிந்து இருக்கும் ஆசைகளை சொல்வது. காக்க காக்கவில்ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா”? என்று அந்த பாடல் தொடங்கும் விதமே நம் ஆசையை தூண்டிவிடும்

பாடலின் சரணத்தில்பெண்களை நிமிர்ந்தும் பார்த்திடா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே கண்களை நேராய் பார்த்துதான் நீ பேசும் தோரணை பிடிக்குதேஎன பெண்களுக்கு ஆண்களிடம் என்னென்ன பிடிக்கும் என ஆண்களுக்கு தகவல் கூறியிருப்பார். காவல்துறை காதலனை கலாபக் காதலனாக (மயிலிறகு காதலன்) மாற்றிய மெல்லியக்காரி தாமரை.

thamarai

வேட்டையாடு விளையாடு திரைப்பட பாடல்கள் தாமரைக்கு மிக முக்கியமான பாடல்கள். ஏனெனில் தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கான ஓப்பனிங் பாடல்களை ஆண் பாடலாசிரியர்களே எழுதி வந்தனர். ஆனால் கமல் என்ற பெரிய ஹீரோ நடிக்கும் படத்திற்குகற்க கற்க கள்ளம் கற்கஎன்ற ஓப்பனிங் பாடலில், ”துப்பாக்கி மற்றும் தோட்டாவைத்தான் காதலித்தான் என்றாலும் காக்கி சட்டையைத்தான் கைப்பிடித்தான் தன் சாவை சட்டைப்பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்என எழுதி அதில் அதகளம் செய்திருப்பார் தாமரை. அப்போதுதான் தாமரை எதற்கும் சளைத்தவர் இல்லை என இந்த தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்து கொண்டது. குறிப்பாக அந்த ஓப்பனிங் பாடலில் ஒரு ஆங்கில வார்த்தை கூட இருக்காது. இன்று வரை அவரது கொள்கையும் இதுதான் என்பது அனைவரும் அறிந்தது

அதே படத்தில் பார்த்த முதல் நாளே பாடலில், ”உனை எதும் கேட்காமல் உனதாசை அனைத்தும் நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்என காதலன் இடத்தில் இருந்து தாமரை உருகியிருப்பார். இது போல் அந்த திரைப்படத்தில் தாமரை எழுதிய பாடல்கள் அனைத்தும் நாம் மலை உச்சியில் நின்றால் ஜில்லென்ற காற்று நம் தேகம் மோதி சிலிர்க்க வைக்கும் அல்லவா அந்த ரகம்

thamarai

வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழையில் பாடல் கேட்பவர்கள் அனைவருக்கும் தோன்றியது, என்ன இதுசட்டென்று மாறுது வானிலைஎன்பதுதான். காரணம் தாமரையின் மழை. நமக்கு பிடித்த பெண் நமது வீட்டிற்கு வந்தால் எப்படி இருக்கும் என்று நாம் யோசித்து கொண்டிருந்த போது தாமரை சட்டென்றுஎன்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பார் என்னை பிடிக்கும்என்ற வரியை தூவி இருப்பார். தாமரை ஒரு ரம்யம்

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஜெஸ்ஸி கதாபாத்திரம் எப்போதும் ஒரு குழப்பமான மனநிலையை கொண்டிருக்கும். கார்த்திக்கை ஜெஸ்ஸி நெருங்கவிடுவாள். திடீரென்று ஒதுக்குவாள். ஜெஸ்ஸி மட்டுமில்லை காதலில் பெண்கள் பெருமளவு அப்படித்தான் இருப்பார்கள். அந்த ஒட்டுமொத்த கதையை, காதலில் ஒட்டுமொத்த பெண்களின் மனநிலையை, “ஒருநாள் சிரித்தேன் மறுநாள் வெறுத்தேன் உன்னை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயாஎன்ற வரிகளில் சொல்லி சென்றிருப்பார். அந்த பாடல் என்பது வெறும் திரைப்பட பாடல் என்று மட்டும் காதலில் லயித்தவர்களால் கடந்து போக முடியாது.

thamarai

காதலுக்காக இப்படி எழுதி தீர்த்த தாமரை, ஒரு தாயாக மகனுக்கு இப்படி எழுதியிருப்பார், ”கண்கள் நீயே..காற்றும் நீயே தூணும் நீ ..துரும்பில் நீஎன்னை பொறுத்தவரை நீதான் என் கடவுள் மகனே என மகனை தெய்வமாய் ஆமோதிக்கும் மகோன்னத நிலை அது. அது மட்டுமின்றி தாய்தான் தெய்வம் என கூறப்பட்டு வந்த தமிழ் சூழலில் மகன் தெய்வம் என உடைத்து கூறிய கர்வ தருணத்தை உருவாக்கியவர் தாமரை. “தோளில் ஆடும் தேனே தொட்டில் தான் பாதிவேளை பலநூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ இசையாக பலபல ஓசை செய்திடும் இராவணன் ஈடில்லா என் மகன்என தாயாக மகனுக்கு தாமரை பிரவாகம் எடுத்திருப்பார்.

தமிழ் சினிமாவில் வாலி அம்மாவிற்கு எழுதியஅம்மா என்றழைக்காத உயிரில்லையேபாடலுக்கும், நா.முத்துக்குமார் அப்பாவிற்கு எழுதியதெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னேபாடலுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு முக்கியத்துவம் தாமரை மகனுக்கு எழுதியகண்கள் நீயே காற்றும் நீயேபாடலுக்கும் இருக்கிறது. இந்த பாடல் கொண்டாடி தீர்க்க வேண்டியது.

thamarai

இப்படி தாமரை எழுதிய பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். சமகால கவிஞர்களில் தாமரை மிக முக்கியமானவர். ஒரு பெண் பாடலாசிரியர் தமிழ் சினிமாவில் வெல்வாரா என்று கேள்வி எழுப்பிய இதே சமூகத்தை, ஒரு ஆங்கில வார்த்தையையும் கலந்து எழுத மாட்டேன் என்ற கொள்கையோடு தாமரையால எப்படி வெல்ல முடிந்தது என்று பேச வைத்திருக்கிறார். அதுதான் தாமரை. அவரது வாழ்க்கையில் சில பிரச்னைகள் வந்தாலும் ஒரு தனி பெண்ணாக அதனை எதிர்கொண்டு வருகிறார். அதற்காக அவருக்கு சல்யூட் அடிக்க வேண்டும்

வசீகரா, அழகிய அசுரா, செந்தூரா, கலாபக் காதலா என்று ஆண்களுக்கு வித விதமான புது புது பெயர்களை சூட்டி ஆண்களை கர்வம் கொள்ள செய்த, ஆண்களை தங்களை தாங்களே ரசிக்க செய்த தாராள மனசுக்காரி தாமரை. அவரது மார்க்கெட் இப்போது தமிழ் சினிமாவில் சரிந்துவிட்டது என்று ஏராளமானவர்கள் கூறி வந்தாலும் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த தமிழகத்தில் எந்ததாமரை மலர்ந்தே தீருமோ தீராதோஇந்த தாமரை நிச்சயமாக மலர்ந்து கொண்டே இருக்கும். ஏனெனில் இந்த தாமரை தமிழின் கர்வம்.