சிறப்புக்கட்டுரை: இன்றைய தமிழக அரசியலில் மூத்த போராளி வைகோ ஏன் அவசியப்படுகிறார்?

 

சிறப்புக்கட்டுரை: இன்றைய தமிழக அரசியலில் மூத்த போராளி வைகோ ஏன் அவசியப்படுகிறார்?

தினம் தினம் புதுப்புது மாற்றங்கள், திருப்பங்கள், அதரடிகள் என எப்போதும் இல்லாத பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல்.

சஞ்ஜீவ் ரவிச்சந்திரன் 

தினம் தினம் புதுப்புது மாற்றங்கள், திருப்பங்கள், அதிரடிகள் என எப்போதும் இல்லாத பரபரப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழக அரசியல்.

கடந்த காலங்களில் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற பிம்ப அரசியலை பார்த்தே பழகிவிட்ட தமிழக மக்களுக்கு, தற்போது நடக்கும் காட்சிகள் அனைத்தும் புதுமையானது.

ஏனெனில் தற்போது கருணாநிதியும் இல்லை, அவரை எதிர்த்து அரசியல் செய்த ஜெயலலிதாவும் இல்லை. திமுக ஆட்சியில் இருந்தபோது கருணாநிதி மறைந்திருந்தால், அவருக்கு பின் சத்தமில்லாமல் கட்சியும், ஆட்சியும் ஸ்டாலின் என்ற ஒருவரிடமே சென்றிருக்கும். 

ஆனால், இங்கு நிலமையோ தலை கீழ். அடுத்தக்கட்ட தலைவர் யார் என்ற கேள்வி எழுவதற்கு முன்பாகவே, கட்சியையும், ஆட்சியையும் விட்டுவிட்டு ஜெயலலிதா மறைந்துவிட்டார். அவரை மட்டுமே தெரிந்து வாக்களித்த தமிழக மக்களுக்கு ஜெயலலிதாவின் உற்ற தோழியான சசிகலா வழங்கிய பரிசு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி.

vaiko

அதன்பின் நீட் தேர்வு, ஜிஎஸ்டி, ஸ்டெர்லைட், காவிரி, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், 8 வழிச்சாலை என இந்த இரண்டு வருடங்களில் தமிழகம் சந்தித்த போராட்டங்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே செல்கிறது. போராட்டக் களம் என்பது தமிழக அரசியலுக்கு புதிதல்ல. இங்கு காலத்துக்கேற்ப போராளிகள் உருவாகிவிடுவார்கள் அல்லது உருவாக்கப்படுவார்கள். இந்திய அரசியலில் கட்சிகளைக் கடந்து மதிப்பு பெற்ற கருணாநிதியின் போராட்டக் குணம் வெளியில் தெரிந்தது கூட, ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ரயில் முன் பாய்ந்த போது தான். 

அதன்பின் அரசியலில் அமைச்சர், முதலமைச்சர் என சிகரங்களை தொட்ட கருணாநிதிக்கு, அதுவரை அவர் வாசிக்காத தமிழில் “தவழ்ந்து செல்லுகின்ற தென்றல் காற்றே போய்ச் சொல்.. என் தலைவனிடம் சொல்.. மிதந்து செல்லுகின்ற மேகங்களே போய் சொல்லுங்கள்.. என் தலைவனிடம்” என போராட்டக் களத்தில் இருந்து அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் வைகோ எழுதிய கடிதத்தை படித்துவிட்டு சிலாகித்திருக்கிறார் கருணாநிதி.

இப்படியாக திமுகவிற்குள் இருந்துகொண்டே போராட்ட களங்களை எதிர்கொண்ட வைகோ, ஈழ மக்களுக்கு ஓர் இன்னல் என்றவுடன் அதுவரை தன் நெஞ்சில் போற்றிய தலைவரிடம் கூட தெரிவிக்காமல், ஈழத்திற்கு சென்று 22 நாட்கள் கழித்து திரும்பியதெல்லாம் ஈழ அரசியல் பேசும் இன்றைய இளைஞர்கள் பலரும் அறிந்திடாத வைகோவின் வரலாறு.

தேர்தல் அரசியல், பதவி, இவைகளின் மீது எல்லாம் பெரிய அளவில் நாட்டம் காட்டாதவராகவே இருந்து வரும் வைகோ, 1993-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டு மதிமுக தொடங்கிய பின் பெரிதாக தேர்தல் வெற்றிகளை சுவைக்கவில்லை. 

vaiko protest

ஆனாலும், தமிழ்நாட்டில் ஒரு போராட்டம் என்றால் வைகோவின் கால்தடம் இல்லாமல் இருந்ததில்லை. உதாரணமாக, ஸ்டெர்லைட்டை மூடக்கோரி சமீபத்தில் நடைபெற்ற போராட்டத்தை கிட்டத்தட்ட 20 வருடங்களாக சத்தமில்லாமல் சட்டத்தின் முன் நடத்தி வந்துள்ளார் வைகோ.

தேர்தல் அரசியலில் அவர் எடுத்த சில முடிவுகளை வைத்து மட்டுமே அவர் மீது நகைச்சுவை என்ற பெயரில் வன்மத்தை கக்கும் இன்றைய தலைமுறையினருக்கு, வைகோ என்ற மூத்த போராளியை அறிமுகம் செய்து வைப்பதே பெரும் சிரமமாக அமைகிறது.

காரணம் இளம் போராளிகளாக அறியப்படும் திருமுருகன் காந்தி, பியூஷ் மனுஷ், வளர்மதி போன்றவர்களை பெரிய அளவில் கொண்டாடும் போராட்ட குணம் படைத்த இளம் தலைமுறையினர், வைகோவின் போராட்ட கள அனுபவங்களை தெரிந்துகொண்டால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

thirumurugan vaiko

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து ஐநா-வில் பேசிய திருமுருகன் காந்திக்கு உடல்நலக் குறைவு என்றவுடன் நீதிமன்றத்திற்கே சென்று அவர் தோளில் கை போட்டு தழுவிக் கொண்டார். அதேபோல், சிறையில் உண்ணாவிரதம் இருந்த வேல்முருகனை சந்தித்து நலம் விசாரித்து தைரியம் தெரிவித்தார்.

காரணம், தனக்கு 74 வயதாகிவிட்டது. இனி வரும் காலங்களில் இளம் போராளிகளின் தேவை அவசியமாகிறது என்கிறார் வைகோ. 

ஆளுநர் குறித்த ரகசியங்களை அம்பலப்படுத்துவது போல் செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்படுகிறார். அவரின் கைதுக்கு டிடிவி தினகரன் மற்றும் பாஜக தலைவர்கள் தவிர அனைத்து கட்சிகளும் ஒருசேர கண்டனம் தெரிவித்திருந்த சமயத்தில், காவல் நிலையம் செல்கிறார் வைகோ.

vaiko protest

அங்கு அரசியல் தலைவராக அல்லாமல் வழக்கறிஞராக சென்று காவல் துறையிடம் வாதாடுகிறார். உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதை ஏற்க முடியாமால், தர்ணாவில் ஈடுபட்ட அவரை கைது செய்கின்றனர் காவல் துறையினர்.

ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருந்த நேரத்தில், களத்தில் இறங்கி கைது செய்யப்பட்டார் அந்த 74 வயது வாலிபர்.

vaiko furious

கோபால் பெரும் செல்வந்தர் கிடையாது, கோபாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஓட்டு விழும் என்ற நிலையும் கிடையாது, ஆனால் போராளி வைகோவிற்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஏனெனில், அங்கு கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது! ஜனநாயகம் நசுக்கப்படுகிறது! அநீதி இழைக்கப்படுகிறது!

இப்படி தமிழகத்தில் எங்கு கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டாலும், ஜனநாயகம் நசுக்கப்பட்டாலும், அநீதி இழைக்கப்பட்டாலும், அங்கு நமக்காக குரல் கொடுக்க இன்றைய போராளிகளின் மூத்த போராளியான வைகோவின் இருப்பு அவசியமாகிறது.