சியாச்சின் பனிமலையில் ஒன்றரை ஆண்டுகளாக போராடி 130 டன் கழிவுகளை அகற்றிய ராணுவம்

 

சியாச்சின் பனிமலையில் ஒன்றரை ஆண்டுகளாக போராடி 130 டன் கழிவுகளை அகற்றிய ராணுவம்

சியாச்சின் பனிமலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சுத்தப்படுத்தும் பணி வாயிலாக மொத்தம் 130 டன் கழிவுகள் அகற்றப்பட்டள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் சியாச்சின் பனிமலையில் 19 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. சர்வதேச அளவில் மிகவும் ஆபத்தான போர்களமாக கருதப்படுகிறது சியாச்சின் பனிமலை.  சியாச்சின் பனிமலை பகுதியில் கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுற்றுப்புறச்சூழலுக்கு பெரும் ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டது. சுமார் 236 டன் அளவுக்கு அந்த பகுதியில் கழிவுகள் கொட்டி கிடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. இதனையடுத்து இந்திய ராணுவம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் சுத்தப்படுத்தும் பணியை தொடங்கியது. 

சியாச்சினில் ராணுவம்

இதுவரை சியாச்சின் பனிமலையில் 130 டன்கள் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அதில், 48.41 டன் உயிர் சிதைக்ககூடிய கழிவுகளும், 40.32 டன் உயிர்-சிதைக்கமுடியாத உலோகம் அல்லாத கழிவுகளும், 41.45 டன் உயிர்-சிதைக்க முடியாத உலோக கழிவுகளும் அடங்கும் என ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. 

பனிமலையில் தூய்மை பணியில் ராணுவ வீரர்கள்

இதுதவிர, உலோகம் அல்லாத கழிவுகளை எருவாக மாற்றுவற்காக சியாச்சின் அடிப்படை முகாமுக்கு அருகில் உள்ள பார்த்தாபூர் மற்றும் லேவில் உள்ள புக்தாங் பகுதியில் எரியூட்டிகள் நிறுவப்பட்டுள்ளது. லேவில் அட்டை மறுசுழற்சி இயந்திரங்களையும் ராணுவம் அமைத்துள்ளது. சுற்றுசூழலை பாதுகாக்க அந்த பகுதிகளில் உள்ள மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பெரிய நடவடிக்கையையும் ராணுவம் தொடங்கியுள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.