சிம்பு பட உரிமையை மோசடி செய்வதாக தேனப்பன் மீது டி.ஆர். புகார்!

 

சிம்பு பட உரிமையை மோசடி செய்வதாக தேனப்பன் மீது டி.ஆர். புகார்!

நடிகர் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் ஆகிய படங்களின் டப்பிங் உரிமையை போலி ஆவணங்கள் மூலம் விற்க முயல்வதாக  தயாரிப்பாளர் தேனப்பன்,எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்வானி  ஆகியோர்  மீது இயக்குநர் டி.ராஜேந்தர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் சிம்பு நடித்த மன்மதன், வல்லவன் ஆகிய படங்களின் டப்பிங் உரிமையை போலி ஆவணங்கள் மூலம் விற்க முயல்வதாக  தயாரிப்பாளர் தேனப்பன்,எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்வானி  ஆகியோர்  மீது இயக்குநர் டி.ராஜேந்தர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இயக்குநரும் நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதனை சந்தித்து, தயாரிப்பாளர் தேனப்பன், எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்வானி ஆகியோர் மீது புகார் அளித்தார்.
 
அந்த  புகாரில் கூறியிருப்பதாவது;-

‘என்னுடைய சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தான் சட்டரீதியாக, மன்மதன் மற்றும் வல்லவன் படங்களின் இந்தி மற்றும் வடமாநில மொழிகளின் டப்பிங் உரிமையை பெற்றுள்ளது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகி தேனப்பன் அவர்களின் தூண்டுதலின் பேரில் எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்வானி ஆகிய இருவரும் மன்மதன் மற்றும் வல்லவன் ஆகிய படங்களின் டப்பிங் உரிமை தங்களுக்கு தான் சொந்தம் என்ற வகையில், கலப்படமற்ற பொய்யையும், உண்மைக்குப் புறம்பான விளம்பரங்களையும் சினிமா பத்திரிகையில் வெளியிட்டு வருகிறார்கள். இது குறித்து என் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டாலும், அதற்கு உரிய பதிலில்லை. அதனால் தயாரிப்பாளர் தேனப்பன் மீதும், சஞ்சய்குமார் லால்வானி மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.’ இவ்வாறு புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘என்னுடைய மகன் சிம்பு நடித்த மன்மதன் படம், சிலம்பரசனின் கதையிலே, அவரது மேற்பார்வையில் வந்த வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம்.அப்படத்தின் அனைத்து மொழிகளிலும் சிலம்பரசனுக்கு உரிமை இருந்ததால், தெலுங்கில் நாங்கள் தான் வெளியிட்டோம். இந்தியில் சிலம்பரசனை அறிமுகம் செய்யும் முயற்சியில் மன்மதன் படத்தை வெளியிட முடிவு செய்திருந்தேன். ஆனால் என் மகன் தமிழில் பிசியாக இருக்கும் காரணத்தால் வடமாநிலத்தில் ஒருவரிடம்  டப்பிங் உரிமையை விற்றேன். அதை தெரிந்து கொண்ட வல்லவன் படத்தின் தயாரிப்பாளர் தேனப்பன்,நான் வல்லவன் படத்தை விற்க  விட மாட்டேன், மன்மதன் படத்தையும் விற்க விட மாட்டேன்.நான் எந்த அளவிற்கு பிரச்னை செய்வேனோ, அந்த அளவிற்கு பிரச்னை செய்வேன் என்று மிரட்டினார். அதையும் மீறி நான் சட்டரீதியாக போராடிய  போது, வட இந்தியாவில் , இருக்க கூடிய கம்ப்ளிட் சினிமா என்ற பத்திரிகையிலேயே விளம்பரம் செய்தார்.உடனே நான் எனது வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பினேன்…ஆனால்  பதிலில்லை. 

உடனே நான் கம்ப்ளிட் சினிமா என்ற பத்திரிகையிலேயே  மன்மதன் மற்றும் வல்லவன் படங்களின் உரிமை சிம்பு சினி ஆர்ட்ஸிடம் இருக்கிறது .இதை மீறி யாராது உரிமை கோரினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளம்பரம் செய்தேன். இதையடுத்து தயாரிப்பாளர் தேனப்பன் தூண்டுதலின் பேரிலே, எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்வானி  அதே கம்ப்ளிட் சினிமாவிலேயே மன்மதன் மற்றும் வல்லவன் படத்தின் உரிமை  எங்களின் பேரில்  இருக்கிறது என்று விளம்பரம் செய்கிறார். இதனால் இவர்கள் செய்கின்ற தவறை சுட்டிக்காட்ட வேண்டும் என்ற உணர்வில் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துளேன்’ என்று கூறினார்.