சிமெண்ட் கலவை லாரிக்குள் மறைந்து பயணித்த 18 பேர் – பேருந்து மூலம் பயணிக்க ஏற்பாடு

 

சிமெண்ட் கலவை லாரிக்குள் மறைந்து பயணித்த 18 பேர் – பேருந்து மூலம் பயணிக்க ஏற்பாடு

மத்தியப்பிரதேசத்தில் சிமெண்ட் கலவை லாரிக்குள் மறைந்து பயணித்த 18 பேரை போலீசார் கண்டுபிடித்தனர்.

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் சிமெண்ட் கலவை லாரிக்குள் மறைந்து பயணித்த 18 பேரை போலீசார் கண்டுபிடித்தனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் மற்றும் உஜ்ஜைன் மாவட்டங்களுக்கு இடையிலான எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள், நாடு தழுவிய ஊரடங்கின்போது சட்டவிரோதமாக மக்கள் நடமாட்டம் இருக்கிறதா என்று சோதிக்க ஒரு லாரியை நிறுத்தினர். அது ரெடிமேட் சிமெண்ட் கலவைகளை எடுத்துச் செல்லும் லாரி ஆகும். அப்போது லாரி ஓட்டுனர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், லாரியை சோதனை செய்தனர்.

அப்போது லாரியின் சிமெண்ட் கலவை டேங்க் உள்ளே 18 ஆண்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் அனைவரும் பிழைப்புக்காக அம்மாநிலத்தில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவார்கள். கட்டுமான நடவடிக்கைகளுக்கு கான்கிரீட் தயாரிக்க பெரிய அளவிலான சிமென்ட் மற்றும் பிற பொருட்களை அந்த லாரி டேங்க் உள்ளே கலக்கப்படுகின்றன. அதனால் போலீசாருக்கு சந்தேகம் வராது என எண்ணி அவர்கள் அதில் மறைந்து சொந்த ஊரான லக்னோவுக்கு செல்ல முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த லாரி டேங்க் உள்ளேயிருந்து தங்கள் கைப்பையுடன் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். இதைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அந்த லாரி காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. மேலும் அந்த 18 பேரும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் கொரோனா தொற்றுநோய்க்காக பரிசோதிக்கப்பட்டனர். இறுதியில் லக்னோவுக்கு பேருந்து மூலமாக அவர்கள் செல்ல மாநில அரசு தற்போது ஏற்பாடு செய்து வருகிறது.