சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; நாகேஸ்வரராவ் ஆஜராக உத்தரவு

 

சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்; நாகேஸ்வரராவ் ஆஜராக உத்தரவு

சிபிஐ அதிகாரியை பணியிட மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் சிபிஐ இடைக்கால இயக்குனராக செயல்பட்ட நாகேஸ்வரராவ் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது

புதுதில்லி: சிபிஐ அதிகாரியை பணியிட மாற்றம் செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் சிபிஐ இடைக்கால இயக்குனராக செயல்பட்ட நாகேஸ்வரராவ் ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிகார் மாநிலத்தில் உள்ள முசாஃபர்பூர் எனும் இடத்தில் குழந்தைகள் நல காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை அரசின் நிதியுதவிடன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வந்தது. இதனிடையே, இந்த காப்பகத்தில் மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில், அங்கு தங்கியிருந்த 7 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும், இதை தட்டிக்கேட்ட ஒரு பெண்ணை கொலை செய்து அந்த வளாகத்திலேயே புதைத்ததும் தெரிய வந்தது.

பாலியல் புகார்களைத் தொடர்ந்து, முசாபர்பூர் காப்பகம் மூடப்பட்டது. அங்கிருந்த சிறுமிகள் அனைவரும் பாட்னா, மதுபாணி ஆகிய இடங்களில் உள்ள காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர்.

முன்னதாக, லாலு பிரசாத்தின் மகனும், பிகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ்வும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். அதனை காப்பகத்தில் ஆய்வு செய்த மும்பையை சேர்ந்த அந்நிறுவனமும் உறுதி படுத்தியது.

இந்த விவகாரத்தில் காப்பக ஊழியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் பதவி வகித்த போது, சில அதிகாரிகளை இடமாற்றம் செய்தார். இதில், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த ஏகே சர்மாவும் அடங்குவார். இவரது இடமாற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏகே சர்மாவை இடமாற்றம் செய்தது ஏன்? இடமாற்றம் குறித்து நீதிமன்றத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என சரமாரி கேள்விகளை எழுப்பியது. 

அத்துடன் சிபிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், இடமாற்றம் செய்யக்கூடாது என்ற உத்தரவை மீறி அதிகாரி மாற்றப்பட்டது குறித்து சிபிஐ விளக்க வேண்டும். நீதிமன்றத்திடம் ஆலோசிக்காமல் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு முகாந்திரம் உள்ளது. எனவே, நாகேஸ்வர ராவ் வருகிற 12-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.