சிபிஐ-க்கு இடைக்கால இயக்குநர்: வழக்கில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்

 

சிபிஐ-க்கு இடைக்கால இயக்குநர்: வழக்கில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்

சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார்

புதுதில்லி: சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார்.

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அவரது அதிகாரங்களை பறித்ததுடன், சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிக சிபிஐ இயக்குநராகவும் மத்திய அரசு நியமித்தது.

இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கட்டாய விடுப்பை ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பதவியேற்றார். எனினும் பிரதமர் மோடி தலைமையிலான உயர் நிலைக் குழு கூடி, அலோக் வர்மாவை பதவி நீக்கம் செய்தது. இதேபோல சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவும் அண்மையில் சிபிஐ சிறப்பு இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவே தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டத்தின்படி சிபிஐக்கு இடைக்கால இயக்குநர் என ஒருவரை நியமிக்க முடியாது எனவும், முழுப்பொறுப்புடன் புதிய இயக்குநரைத்தான் நியமிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும், சிபிஐ இயக்குநர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். சிபிஐ தேர்வு குழுவில் தாம் இடம்பெற்றிருப்பதால் இந்த வழக்கில் விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வேறு ஒரு அமர்வு முன்பு இந்த வழக்கானது வருகிற 24-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.