சின்ன நம்பிக்கையை கொடுத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி…. கொரோனாவைரஸ் தாக்கம் குறித்து வாயை திறக்காத மத்திய புள்ளியியல் அலுவலகம்…

 

சின்ன நம்பிக்கையை கொடுத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி…. கொரோனாவைரஸ் தாக்கம் குறித்து வாயை திறக்காத மத்திய புள்ளியியல் அலுவலகம்…

கடந்த டிசம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 4.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது முந்தைய செப்டம்பர் மாதத்தை காட்டிலும் சிறிது அதிகமாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்த அனைத்து முடிக்கப்பட்ட தயாரிப்புகள் அல்லது சரக்குகள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பு. கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர் சரிவை சந்தித்து வருகிறது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த  வெளியிட்ட முதல் கட்ட மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி ஏற்படும் என தெரிவித்து இருந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

இதனை உறுதி செய்யும் வகையில் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதமாக வீழ்ந்தது. மேலும், செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிவடைந்தது. இதனால் இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5 சதவீதத்தையாவது தொடுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் மந்தநிலையிலிருந்து மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விட்டதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வந்தது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி

இந்நிலையில் கடந்த டிசம்பர் காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி புள்ளிவிவரத்தை அண்மையில் மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டது. அந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4.7 சதவீதமாக சிறிது ஏற்றம் கண்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறிது வளர்ச்சி ஏற்பட்டுள்ளது மத்திய அரசுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இருப்பினும், 2024ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற இலக்கை அடையவேண்டுமானால் இந்த வளர்ச்சி நிச்சயமாக போதுமானது கிடையாது. ஆகையால் வளர்ச்சி அதிகரிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்துவது முக்கியம். கொரோனாவைரஸால் நம் நாட்டின் பொருளாதாரத்தில் எந்தமாதிரியான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்படும் என்பது குறித்து எந்தவித கருத்தையும் மத்திய புள்ளியியல் அலுவலகம் தனது அறிக்கையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.