சினிமா இருக்கும்வரை இருக்கப்போகிறவர் மகேந்திரன்! அவர் மறைவு உடலுக்குத்தானே தவிர: அவர் படைப்புகளுக்கு அல்ல – இயக்குநர் சந்திரா

 

சினிமா இருக்கும்வரை இருக்கப்போகிறவர் மகேந்திரன்! அவர் மறைவு உடலுக்குத்தானே தவிர: அவர் படைப்புகளுக்கு அல்ல – இயக்குநர் சந்திரா

எல்லா இயக்குனருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஏதாவது ஒரு சினிமா ஆதர்சமாக இதயப்பூர்வமாக அவர்களைப்  பாதித்து ,அவர்கள் சினிமாவைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணமாக இருக்கும். எங்கள் ஊரில் கூடலூர் தியேட்டர்லில் நான் அறியாத வயதில்  பார்த்த “உதிரிப் பூக்கள்” திரைப்படம் எப்பவும் என் வாழ்க்கையில் கூடவந்துகொண்டே இருந்தது.சினிமா என்பது அற்புதமான கலை என்று எனக்கு எப்போதும் உணர்த்தி கொண்டே இருந்தது. எப்போதும்  திரும்பத் திரும்ப பார்க்கின்ற படம்

எல்லா இயக்குனருக்கும் ஏதோ ஒரு விதத்தில் ஏதாவது ஒரு சினிமா ஆதர்சமாக இதயப்பூர்வமாக அவர்களைப் பாதித்து ,அவர்கள் சினிமாவைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணமாக இருக்கும். எங்கள் ஊரில் கூடலூர் தியேட்டரில் நான் அறியாத வயதில்  பார்த்த “உதிரிப் பூக்கள்” திரைப்படம் எப்பவும் என் வாழ்க்கையில் கூடவந்துகொண்டே இருந்தது.சினிமா என்பது அற்புதமான கலை என்று எனக்கு எப்போதும் உணர்த்தி கொண்டே இருந்தது. எப்போதும்  திரும்பத் திரும்ப பார்க்கின்ற படம்.

என் குழந்தைகளையும் திரும்பத் திரும்ப “உதிரிப் பூக்கள்” படத்தைப்  பார்க்க வைத்திருக்கிறேன். அவர்களுக்கு  இந்த உலகில் அன்பு மட்டும்தான் அச்சானி என்று உணர்த்த விரும்பினேன்.அதனால் அப்படிச் செய்தேன்.தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை உயர்த்திய படம் உதிரிப் பூக்கள். தமிழ் சினிமாவை உலக அளவுக்கு உயர்த்திய படமும்கூட. என்னுடைய டாப் 10 தமிழ் சினிமாவில் முதல் இடம் “உதிரிப் பூக்கள்”தான். அந்த காவியத்தை இயக்கிய லெஜெண்ட் இயக்குனர் மகேந்திரன் இன்று உயிருடன் இல்லை.ஆனால் அவர் தமிழ் சினிமாவுக்கு விட்டுச் சென்ற பொக்கிஷங்களான “முள்ளும் மலரும், மெட்டி, நண்டு,ஜானி,நெஞ்சத்தைக் கிள்ளாதே” ஆகிய திரைப்படங்கள் என்றும் நீங்காமல்..சினிமா இருக்கும்வரை இருக்கும்.

மகேந்திரன் இயக்கிய படங்கள்,ஏன் அப்படி காவியமாக இருக்கிறது  என்றால்  மனித உணர்வுகளை, ஆண் பெண் உறவு முறைகளை  பாசாங்கு இல்லாமல் பேசியவை என்பதுதான் காரணம். நீங்கள் அந்தக் கதைகளோடு பிணைத்துக்கொள்ளும்படியாக, அந்தக் கதைமாந்தர்களோடு உரையாடும் படியாக அவருடைய சினிமா இயக்கப்பட்டிருக்கும்.  உங்கள் வாழ்வில் அணைத்துக் கொள்ளவேண்டிய அற்புதக் கணங்களை காட்சிபடுத்தி இருப்பார் மகேந்திரன்.  

mahendran

“உதிரிப் பூக்கள்” திரைப்படத்தை நீங்கள் பார்த்திருந்தீர்கள் என்றால் உங்கள் குழந்தைகளை ஒரு நாளும் நிராதரவாக விடமாட்டீர்கள். குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைமுறை குறித்து மனித மாண்போடு நடந்துகொள்வீர்கள்.இந்தப் படத்தின் திரைமொழி என்பது அதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒன்று. அதுவரை வசனமாக பொழிந்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை காட்சிமொழிக்கு மாற்றியவர் மகேந்திரன். அசோக்குமார் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருப்பார்.நிஜ மனிதர்களை  அருகிலிருந்து படம் பிடித்ததைப்போல மிக நெருக்கமாக இருக்கும். நடிகர்களின் குணாதியசங்களும் பாவனைகளும் வசனங்களாக மட்டும்  வெளிப்படுத்தாமல் ,விஷுவலாக காட்சிப்படுத்தியதன் மூலமாகத்தான் இன்று வரை உதிரிப்பூக்கள் திரைப்படத்தை டாப் 10 தமிழ் சினிமாவில் வைத்து அழகுபார்க்க வைக்கிறது.

பாடல் காட்சியில் மாண்டேஜ் என்று சொல்லப்படும் முறையை தமிழ் சினிமாவில்  அறிமுகப்படுத்தி, பாடல் கதையைவிட்டு நகராதபடி படத்தை இயக்கியவர் மகேந்திரன் .இளையராஜாவின் இசை மகேந்திரன் படத்திற்கென்று மேஜிக் நிகழ்த்தியதைப்போல கதையின் போக்கை ஒருபடி உயர்த்திக் காட்டும். இந்தப் படத்தை பற்றி மட்டும் பல கட்டுரைகளை எழுத வேண்டும்.அந்த அளவிற்கு படத்தில் அத்தனை துறைகளும் மிளிர்ந்து கிடக்கும். ஒளிப்பதிவும்,இசையும்,நடிகர்கள் தேர்வும் அவர்கள் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பும்,திரைக்கதையும் அதைக் காட்சிபடுத்தியவிதமும் என்று ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக கட்டுரை எழுதலாம்.

mahendran

“முள்ளும் மலரும்” பாசமலர் கதைதான் ஆனால் அது வேறொரு கோணத்தில் உங்கள் வாழ்க்கைக்கு நெருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கும். அன்பு என்ற பெயரில் எப்பவும் குடும்பப்  பெண்களை தன் கட்டுக்குள்ளே வைத்திருப்பதுதான் நம் சமூக அமைப்பு .அன்புக்காக  சகித்துக்கொண்டு தன் விருப்பங்களை தேர்வுகளை தன் காதலை புதைத்துக்கொண்டு வாழ்ந்துவிடுவார்கள் பெண்கள். ஆனால் அந்தக் குடும்பம் அதற்கு மேல் பெருந்தன்மையாக, அந்தப் பெண்ணின் விருப்பங்களை நிறைவேற்றி வைக்க வேண்டும்.  அப்போதுதான் பரஸ்பரம் அன்பிற்கான மதிப்பிருக்கும்.வாழ்வின் உன்னதமும் அதுதான்  என்பதை முள்ளும் மலரும் படத்தில் அண்ணன் தங்கச்சி பாசக் கதையாக சொல்லியிருப்பார் மகேந்திரன் . 

தமிழ் சினிமாவின் தேவதை நடிகையும் பாலுமகேந்திராவின் கண்டுபிடிப்புமான ஷோபா ,கதாநாயகன் ரஜினிக்கு தங்கையாக நடித்திருப்பார்.இவர்கள் இருவரைச் சுற்றி மற்ற கதாபாத்திரங்களை அமைத்தவிதமே அழகாக இருக்கும். ரஜினியை இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தியிருந்தாலும் ரஜினி என்ற அற்புத நடிகன் வெளிப்பட்டது இயக்குநர் மகேந்திரன் மூலமாகத்தான். முள்ளும் மலரும் படத்தின் திமிர்பிடித்த ஆணாக அன்பு நிறைந்த அண்ணனாக என்று இரு முகங்களை காட்சிக்கு காட்சி ரஜினி மாற்றியவிதம் பிரம்பிப்புதான்.ரஜினி என்ற அற்புத நடிகன் வெளிப்பட்டதும் அங்கேதான்.படத்தில் ரஜினியின் இரு குணாதியங்களும் நீர்த்துப்போகாமல், ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் எண்ணெய்யும் தண்ணீருமாக விலகி இருந்தவிதம் ரஜினியின் சினிமா வாழ்வில் அசைக்க முடியாத, யாரும் மாற்றி அமைக்க முடியாத  ஒரு  இடமாகும். 

mahendran

 
தேவதை ஷோபாவின் தேவதைத்தன்மையை உயர்த்தியது  முள்ளும் மலரும்  படத்தின் வள்ளி கதாபாத்திரம். அப்பாவி தங்கையாக அன்பைத் தவிர யாதொன்றும் அறியாத வெகுளியான கதாபாத்திரத்தில் ஷோபா உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணைப்போல, உங்கள் அன்புகொண்ட தங்கையைப்போல உங்கள் மனம் கவர்ந்த காதலியைப்போல  உங்கள் வாழ்வில் ஒன்றாகி இருப்பாள்.இப்படி மறக்க முடியாத கதாபாத்திரத்தை மகேந்திரன் உருவாக்கியது தமிழ் சினிமாவின் கொடையாகும். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி இன்றுவரை மிகச்சிறந்த க்ளைமாக்ஸ் காட்சியாக கொண்டாடப்படுகிறது. பக்கம் பக்கமாக ரஜினியும் ஷோபாவும் வசனம் பேசமாட்டார்கள் அவர்களின் முக பாவங்கள் மட்டுமே காட்சியாக இருக்கும். அத்தகைய நடிப்பை வெளிப்படுத்த ஆகச்சிறந்த நுணுக்கம் தேவைப்படும்.அப்படியொரு காட்சியமைக்க இயக்குனருக்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலும் திரைமொழியும்தான் மகேந்திரனை இந்திய சினிமாவின் மிகச்சிறந்த ஆளுமையாக கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
 
கதையில்,கதாநாயகன் கதாநாயகியைத் தவிர்த்து தன்னுடைய படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்திருப்பார் மகேந்திரன். அதற்கு காரணம் கதைக்கு மகேந்திரன் கொடுத்த முக்கியத்துவமே ஆகும்.முள்ளும் மலரும் படத்தில் ஷோபாவை காதலிக்கும் எஞ்ஜினியராக வரும் சரத்பாபு  அவ்வளவு subtle act ஐ வெளிப்படுத்தியிருப்பார். மகேந்திரனின் நிறைய படங்களில் நடித்திருக்கும் சரத்பாபு ஏதோ மகேந்திரன் படங்களில் நடிக்க மட்டுமே உருவான நடிகரைப் போன்றே எனக்குத் தோன்றும்.இப்படி மகேந்திரன் படத்தில் நடித்த எல்லோரையும் நினைவுகூற முடியும்.

முள்ளும் மலரும் படத்தை பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்திருப்பார்.படத்தின் தன்மைக்கேற்ப  ஒளிப்பதிவை தேர்வு செய்யும் கலை ஒரு இயக்குநருக்கு மிக முக்கியமான ஒன்று. அந்த வகையில் ஒரு மலை பிரதேசத்தின் அழகு கதாபாத்திரத்தின் தன்மையை குலைத்துவிடாதபடி மிகச்சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். மகேந்திரனின் ஒவ்வொரு படத்தின் ஒளிப்பதிவும் அந்தந்த கதைக்கும் கதைமாந்தர்களின் குணாதியங்குளுக்கும்  ஏற்றவாறு படத்திற்கு படம் மாறுபட்டே இருக்கும்.

mahendran

 
இலக்கியத்திலிருந்து சினிமாவை உருவாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல.உலகம் முழுவதுமே அது சவால் நிறைந்த வேலை.என் கதையை இந்த இயக்குநர் கெடுத்துவிட்டார் என்று எழுத்தாளர்கள் புலம்புவார்கள். ஆனால்  ஒரு சாதாரணமான நாவலை அழகிய கலை வடிவமாக மாற்றியவர் மகேந்திரன்.எழுத்தாளர் உமாசந்திரன் எழுதிய கதையின் ஒரு சின்ன பகுதியை எடுத்துக்கொண்டு அதை சினிமா மொழிக்கு மாற்றியவிதம் எல்லா இயக்குனர்களும் படிக்க வேண்டிய பாடம். நாவல் திரைப்படம் ஆகும் வித்தையை தமிழ் சினிமாவில்  சிறப்பாக செய்துகாட்டியவரும் மகேந்திரன்தான்.

புதுமைப்பித்தன் எழுதிய “சிற்றன்னை” கதையின் அடிநாதத்தை எடுத்துக்கொண்டு  உதிரிப்பூக்கள் திரைப்படத்தை அற்புத படைப்பாக மாற்றியவிதமும் லெஜண்ட்தன்மைதான். ஏனேனில் நாவல்களை சினிமாவாக்குவது அத்தனை எளிதல்ல.தட்டுத்தடுமாறி அதை கோட்டைவிட்ட உதாரணங்களே இங்கே அதிகமிருக்கிறது. தனித்துவமான சினிமா மொழியை கையாண்டால் மட்டுமே நீங்கள் நாவலை சினிமாவாக்குவதில் வெற்றியடைய முடியும்.இந்த இடத்தில்தான் அதை வெற்றிகரமாக செய்து முன்னோடியாக விளங்குகிறார் மகேந்திரன்.

mahendran

க்ரைம் படங்களை சண்டைக் காட்சிகள், கவர்ச்சியான பாடல் என்று மசாலாவாக காட்டிக்கொண்டிருந்த காலத்தில் அழகான க்ளாசிக் சினிமாவாக ஜானி படத்தை இயக்கினார் மகேந்திரன். ஸ்ரீதேவி, ரஜினி நடித்த இப்படத்தில், ஸ்ரீதேவி ரஜினியிடம் காதலை வெளிப்படுத்தும் ஒரு காட்சி வரும்.தமிழ் சினிமாவில் முக்கிய காதல் காட்சியாக அது இன்றும் விளங்குகிறது. ஒரு பாடகிக்கும் ஒரு க்ரிமினலுக்கும் இடையே நடக்கும் இக்கதையில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். க்ரிமினல் திருந்துவதும்,நல்லவன் க்ரிமினல் ஆவதும் என்று மனிதன் தன் சூழ்நிலையால்,தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களால் நிறம் மாறிப்போவதுதான் இப்படத்தின் கதை. க்ரைம் கதையாக இருந்தாலும் மனித உறவுகளால் நிகழும் மாற்றமே ஜானி படத்தின் பிரதானமாக பேசப்பட்டிருக்கும்.இளையராஜா இசையமைத்த இப்படத்தின் ஆல்பம் இன்றைய இளைஞர்களும் கொண்டாடும் தவிர்க்க முடியாத இசையாக இருக்கிறது. 

mahendran

நண்டு திரைப்படம் பர்சனலாக என்னை பாதித்த படம். இப்படத்தில் வரும்  “அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா சொல்லித்தந்த வானம்  தந்தையல்லவா” பாடல் என் அப்பாவிற்கு மிகப்பிடித்தமான பாடல்.கேன்சரால் பாதிக்கப்பட்ட என் அப்பா தன் கடைசி காலத்தில் அதிகம் கேட்ட பாடல்.என் அப்பாவைப்போல அப்படத்தின் நாயகனும் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பான் என்பதுதான்  அப்படத்தை எனக்கு நெருக்கமாக்கியது. உதிரிப் பூக்கள் படத்தில் கதாநாயகியாக நடித்த அஸ்வினிதான் இப்படத்திலும் கதாநாயகி.மகேந்திரன் படத்தில் துயரார்ந்த கதாபாத்திரத்தில் நடித்த அஸ்வினியால் அதன்பின் அந்த துயரார்ந்த முகத்திலிருந்து வெளிவர முடியவில்லையோ என்கிற பிரமை மற்ற படங்களில் அஸ்வினியைப் பார்க்கும்போது எனக்குத்  தோன்றும்.அந்த அளவிற்கு மகேந்திரன் அவரை கதாபாத்திரத்தின் குணாதிசியங்களோடு ஒன்றிப்  போகச் செய்திருப்பார்.

ஆண்,பெண் மனச்சிக்கலை,உறவுச் சிக்கலை அன்றைய காலகட்டத்தில் நவீனமாக பேசியபடம் “நெஞ்சத்தை கிள்ளாதே” திரைப்படம் . சுகாசினி,சரத்பாபு,மோகன்,பிரதாப்போத்தன் நடித்திருந்த இப்படம் தன் காதல் விருப்பம் நிறைவேறாத ஒரு பெண் குடும்பத்திற்குள் நிலைகொள்ள முடியாத தன்மையை அவளுடைய மனச் சிக்கலை தெளிவாக உணர்த்திய படம். “மௌன ராகம் ” இந்த படத்தின் வழித்தோன்றல்தான்.  வழக்கம்போலவே மகேந்திரன் இந்தப் படத்திலும் நடிகர்களை தங்களுடைய கதாபாத்திரத்திலிருந்து நழுவவிடாமல் அதன் தன்மையை உணர வைத்து  கச்சிதமாக நடிப்பை வாங்கியிருப்பார்.

விஜயகுமாரி,ராதிகா,வடிவுக்கரசி மூன்று பெண்களின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மெட்டி. மகேந்திரன் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.பெண்கள் குடும்ப நிறுவனத்தில் படும்பாடுகளை மெட்டி திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். ஆண்,பெண் உறவுகளில் பெண் உணர்வுகள் நசுக்கப்படும் விதத்தை  பிரச்சாரமாக இல்லாமல் கலையமைதியோடு இயல்பான சினிமாவாக்கியவர் மகேந்திரன். அதனால்தான் எப்போதும் சாகாவரம் பெற்றவை அவருடைய படைப்புகள் என்று துணிச்சலாக சொல்ல  முடிகிறது. 

mahendran

மெட்டி படத்தில் இடம்பெற்றிருக்கும் “மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட” பாடலை தமிழ் உலகம் கடந்து செல்லவே முடியாது.மகேந்திரன் படத்தின் மாண்டேஜ் பாடல்களைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும். முள்ளும் மலரும் படத்தில்  “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்”, உதிரிப் பூக்கள் படத்தில் “அழகிய கண்ணே உறவுகள் நீயே” ,நண்டு படத்தில் “அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா” நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் “பறவையே புதிய பாடல் பாடு” ஆகிய பாடல்களை தமிழர்கள் என்றும் நினைவில் வைத்துக்கொண்டே இருப்பார்கள். 

mahendran

மகேந்திரனின் சினிமா மேதமையை ஒருநாள் ஒரு கட்டுரையில் சொல்லி முடித்துவிட முடியாது.சினிமா இருக்கும்வரை இருக்கப்போகிறவர் மகேந்திரன்.அவர் மறைவு உடலுக்குத்தானே தவிர;அவர் படைப்புகளுக்கு அல்ல!

இதையும் படிங்க: இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு குவியும் பாராட்டுக்கள்! எதுக்கு தெரியுமா?