சித்திரைத் திருவிழா அன்று மக்களவைத் தேர்தல் – சிக்கல்கள் என்னென்ன ?

 

சித்திரைத் திருவிழா அன்று மக்களவைத் தேர்தல் – சிக்கல்கள் என்னென்ன ?

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் மக்கள் பரபரப்பாக தேர்தல் குறித்துத் தான் விவாதித்து வருகின்றனர். குறிப்பாக மதுரை மக்கள்

.நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 – ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.  அதே தேதியில் மதுரையில்  மிகவும் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழாவும்  நடைபெற இருக்கிறது. இதனால் மதுரை மக்கள் பெரும் அதிர்ச்சி மற்றும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சித்திரைத் திருவிழா 

சித்திரைத் திருவிழா மதுரை மட்டுமின்றி அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்படும், கொண்டாடப்படும் முக்கியத்துவம் வாய்ந்த திருவிழா. 

சித்திரை மாதம் பௌர்ணமி நாளை ஒட்டிய நாட்களில் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூணத் தொடங்கி விடும். மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், அதைத் தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்  வைபவமும் மதுரை சுற்றுவட்டாரப் பகுதி மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து எல்லாம் திருவிழா காண மக்கள் மதுரையில் குவியத் துவங்குவர். வெளியூர்களில் வசிப்பவர்களும், மதுரையில் இருக்கும் உறவினர்  வீடுகளுக்கு திருவிழா காண வருவார்கள்.

மதுரை சித்திரைத்திருவிழா சைவமும் வைணவமும் இணையும் திருவிழா ஆதலால், இரு சமயத்தவரும் உற்சாகமாகத் திருவிழாவில் கலந்து கொள்வர்.

மதுரை மக்களவைத் தொகுதி 

மதுரை மக்களவைத் தொகுதி, தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகள் வரிசையில் 32 -ஆவதாக அமைந்துள்ளது. அங்கிருக்கும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,022,421. இதுவரை மதுரை மக்களவைத் தொகுதித் தேர்தலில் காங்கிரஸ் அதிகபட்சமாக  8 முறை வெற்றி பெற்றுள்ளது. பொதுவாகவே தமிழகத்தில் மதுரைத் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது. 

கடந்த தேர்தலின் போது மதுரைத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் 67.88%  என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் என்ன சிக்கல் ?
  • சித்திரைத் திருவிழா நாளில் தேர்தல் நடத்துவதால், மதுரைத் தொகுதியில் வாக்குப்பதிவு கணிசமாகக் குறையும் வாய்ப்புள்ளது.
  • சுற்றுவட்டாரப்பகுதி மக்களும், திருவிழாவில் பங்கேற்க மதுரை செல்ல வாய்ப்பிருப்பதால் அந்தப் பகுதிகளிலும் வாக்குப் பதிவு பாதிக்கப்படும்.
  • திருவிழாவிற்குக் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்துவது மற்றும் தேர்தல் பாதுகாப்பு இரண்டையும் செயல்படுத்துவதில் காவல் துறைக்கு குழப்பங்களும், சிரமங்களும் ஏற்படலாம்.
  • சித்திரைத் திருவிழா நடக்கும் அதே நாளில் வைகை நதி பாயும் மற்ற  ஊர்களிலும் திருவிழா கொண்டாடப்படும். அங்கும் இதே போன்ற சிரமங்களைப் பொதுமக்களும், காவல் துறையினரும் சந்திக்க நேரிடும்.
தேர்தலை ஒத்தி வைக்க மனு 

இந்நிலையில், மதுரை சித்திரைத் திருவிழாவின் விவரங்களை இன்று (12.3.19) மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையம் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், சித்திரைத் திருவிழாவோடு சேர்த்து தேர்தலை நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாகக் கூறியுள்ள மாவட்ட ஆட்சியர் நடராஜன், தேவைப்பட்டால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார்.

மேலும்,  மதுரையில் ஏப்ரல் 18ஆம் தேதி சித்திரைத் திருவிழா நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் நடைபெறும் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.