சிட்னி டெஸ்ட்: புஜாரா மீண்டும் சதம்; இந்திய அணி 303 ரன்கள் குவிப்பு

 

சிட்னி டெஸ்ட்: புஜாரா மீண்டும் சதம்; இந்திய அணி 303 ரன்கள் குவிப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 303 ரன்கள் குவித்துள்ளது

-குமரன் குமணன்

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 303 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியில் ஃபிஞ்ச் நீக்கப்பட்டார். பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் அணிக்கு திரும்பினார். மிட்செல் மார்ஷ் நீக்கப்பட்டு மார்னஸ் லபுசாஞ்சே சேர்க்கப்பட்டார்.

இந்திய அணியில், அஷ்வின் தனது உடல் தகுதியை நிர்னயிக்க தவறியதால் இடம் பெறவில்லை. ரோகித் ஷர்மாவுக்கு பதில் ராகுல் சேர்க்கப்பட்டார். இஷாந்த் ஷர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தேர்வானவர் இடதுகை சைனாமேன் வகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ். இந்த தொடரில் தனது முதல் போட்டியில் குல்தீப் யாதவ் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மயங்க் அகர்வால், ராகுல் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஒவரிலேயே 9 ரன்களில் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஷான் மார்ஷூக்கு ஸ்லிப் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த ராகுல், தான் சந்தித்த ஆறு பந்துகளுக்குள் இரண்டு பவுண்டரிகளை அடித்திருந்தார். இரண்டுமே தடுமாற்றத்துடன் ஸ்லிப் திசையை தாண்டி சென்ற ஷாட்கள். தனது தவறுகளை ராகுல் கணிக்க தவறியதால், அதே போன்று ஆடித்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு அகர்வால் – புஜாரா இணை 116 ரன்கள் சேர்த்தது. ஸ்கோர் 126ஆக இருந்தபோது லியோன் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்று, லாங் ஆன் திசையில் நின்றிருந்த ஸ்டார்க்கிடம் கேட்ச் ஆனார் அகர்வால். அதுவரை சிறப்பாக விளையாடி 111 பந்துகளில்77 ரன்கள் அடித்திருந்த அகர்வால், எதிர்கொண்ட 112ஆம் பந்தில் லியோன் பந்துவீச்சில் தனது மூன்றாவது சிக்ஸரை பதிவு செய்ய ஆசைப்பட்டு சிக்கிக்கொண்டார். ஒரு வகையில் இன்று தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையுமே அவர்களது பேராசை தான் வீழ்த்தியது.

மூன்றாவது விக்கெட்டாக கோலி ஆட்டமிழந்தார். ஸ்கோர் 180ஆக இருந்தபோது ஹேசில்வுட் வீசிய பந்தை பின்னோக்கி திருப்ப முயன்ற கோலியை, இடது புறம் நகர்ந்து பிடித்த கேட்ச் மூலம் வீழ்த்தினார் விக்கெட் கீப்பர் பெயன். கோலி 59 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்திருந்தார்.

அடுத்ததாக வந்த ரஹானே, 55 பந்துகளில் ஒரேயொரு பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து வெளியேறினர். துரதிர்ஷ்டவசமாக ஸ்டார்க் வீசிய பவுன்ஸர் ரஹானேவின் கையுறையில் பட்டு மேலெழுந்தது. அதனை பெயன் தனது கைகளை உயர்த்தி பிடித்தார்.

தன்னைச் சுற்றி மூன்று விக்கெட்டுகள் விழுந்த போதும், புஜாராவின் அபார ஆட்டம் தொடர்ந்தது. இத்தொடரில் மூன்றாவது முறையாக சதம் கண்டார் அவர். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர்களில் கோலி (2014/15ல் நான்கு சதங்கள் ) கவாஸ்கர் (1977/78ல் 3 சதங்கள் ) ஆகியோர் மட்டுமே இதற்கு முன் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்தவர்கள். ஒட்டுமொத்தமாக இது புஜாராவின் 18-ஆவது சதமாகும். அதேபோல், இந்த இன்னிங்ஸில் 72-வது ரன்னை அடித்தபோது, இத்தொடரில் 400 ரன்களை கடந்தார் புஜாரா.

மறுமுனையில் இருந்த ஹனுமா விஹாரியின் ஆட்டம், இரண்டாம் புது பந்தை ஆஸ்திரேலியா கையில் எடுத்தபிறகு வேகமெடுத்தது .புதிய பந்தால் வரக்கூடிய சவால்களை இந்தியா கடக்க விஹாரியின் ஆட்டம் உதவியது.

இன்றைய ஆட்ட நேர இறுதியில் இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 303 ரன்கள் குவித்துள்ளது. புஜாரா 250 பந்துகளில் 16 பவுண்டரிகளோடு 130 ரன்களுடனும், விஹாரி 58 பந்துகளில் 5 பவுண்டரிகளோடு 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை காலை 5 மணிக்கு இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்க உள்ளது.

இந்திய அணிக்கு தற்போது களத்தில் உள்ளவர்கள் தவிர பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோரும் களம் காணவுள்ளதால், கடந்த போட்டியை போலவே பெரிய ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது. அஸ்திரேலிய அணியினர் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே இந்த போட்டியில் பலம் பெற இயலும்.