சிட்னி டெஸ்ட் : தடுமாறி நின்ற ஆஸ்திரேலியாவும் தடையாக வந்த  மழையும்… 

 

சிட்னி டெஸ்ட் : தடுமாறி நின்ற ஆஸ்திரேலியாவும் தடையாக வந்த  மழையும்… 

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இன்று நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமானது. தொடர்ந்து சிட்னியில் மழை பெய்து வருகிறது.

-குமரன் குமணன்

சிட்னி: இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான இன்று நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமானது. தொடர்ந்து சிட்னியில் மழை பெய்து வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் , மழை பெய்ததால் உணவு இடைவேளை தாண்டிய பின்னரே மதியம் 1.50 மணிக்கு இந்திய நேரப்படி 8.20 மணிக்கு நொடங்கியது .நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 83.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்திருந்தது .

CRICKET

ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஸ்கோர் ஏறாத நிலையில் ஷமி 25 ரன்கள் எடுத்திருந்த கம்மின்ஸை வெளியேற்றினார். தாழ்வாக வந்த பந்து ஸ்டம்பை பதம் பார்ப்பதை கம்மின்ஸால் தவிர்க்க இயலவில்லை. 44 பந்துகள் வரை நீடித்த கம்மின்ஸ் 6 பவுண்டரிகள் அடித்திருந்தார்.

ஸ்கோர் 257ஆக இருந்தபோது பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப் ,பும்ரா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் .111 பந்துகளைச் சந்தித்த ஹான்ட்ஸ்கோம்ப் 5 பவுன்டரிகளோடு 37 ரன்கள் சேர்த்தார் . அடுத்த ஒவரிலேயே குல்தீப் யாதவ் வீசிய பந்து லியோனின் காலை தாக்க ,LBW ஆகி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அப்போதைய ஸ்கோர் 258/9 .

CRICKET

சில நிமிடங்களுக்குப் பிறகு ஹேசில்வுட் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று தூக்கி அடித்த பந்தை பிடிக்காமல் விட்டுவிட்டார் விஹாரி .அப்போதைய ஸ்கோர் 264. விஹாரி அந்த கேட்சை பிடித்திருந்தால் இன்னிங்ஸ் அப்போதே முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் நினைத்ததெல்லாம் நடந்துவிடுமா என்ன ? 

இந்திய பந்துவீச்சாளர்களை பார்த்தால் எதிரணிகளின் கடைசி கட்ட வீரர்கள் வார்த்தைகளில் விவரிக்க இயலாத அளவு பலம் பெற்று விடுவது பெரும்பாலான நேரங்களில் நடக்கும் .அது தான் இன்றும் நடந்தது. ஹேசில்வுட் – ஸ்டார்க் இருவரும் நிலைத்து நின்று ஆட தொடங்கினர் . இதனால் அந்த அணி 300 ரன்களை தொட்டது . அவர்கள் இருவரும் இணைந்து 42 ரன்களை திரட்டியிருந்த நிலையில் 
கடைசி விக்கெட்டாக ஹேசில்வுட்டை வீழ்த்தியதன் மூலம் ,டெஸ்ட் போட்டிகளில் இரண்டாம் முறையும், வெளிநாட்டு மண்ணில் முதன்முறையாகவும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் குல்தீப் .

cricket

மற்ற ஜந்து விக்கெட்டுகளில் ஜடேஜா ,பும்ரா தலா இரண்டு விக்கெட்டுகளும் ஷமி ஓரு விக்கெட்டையும் கைப்பற்றினர் .ஹேசில்வுட் 45 பந்துகளில் 2 பவுண்டரிகளோடு 21 ரன்கள் எடுத்தார் .ஸ்டார்க் 3 பவுண்டரிகளோடு 55 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 104.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி சரியாக 300 ரன்கள் எடுத்தது .

322 ரன்கள் பின்தங்கியிருந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு ஃபோலோ ஆன் அளித்தார் கோலி . 2005ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்காம் போட்டிக்கு பின் ஆஸ்திரேலிய அணி ஃபோலோ ஆன் ஆவது இதுவே முதல்முறை. சொந்த மண்ணில் இதற்கு முன் ஆஸ்திரேலியா இதே சிட்னி நகரில் இங்கிலாந்துக்கு எதிராக 1988ஆம் ஆண்டில் இப்படி ஒரு நிலைக்கு உள்ளாகியிருந்தது .

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்தபோது , உள்ளூர் நேரப்படி மாலை 3.43 மணியளவில் (இந்தியாவில் காலை 10.15க்கு) தேநீர் இடைவேளை விடப்பட்டது. மழை இல்லாதபோதும் வெளிச்சம் போதாததால் இந்த முடிவு சற்று முன்கூட்டியே எடுக்கப்பட்டது .

rain

இதன் பிறகு ஆட்டத்தைத் தொடர முடியாத நிலையே நீடித்ததால் மாலை 4.20 மணி அளவில் (இந்திய நேரப்படி காலை 11.50க்கு) ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டது . இன்றைக்கு வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே வீசிப்பட்டுள்ளன .   தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 316 ரன்கள் பின்தங்கியுள்ளது .

இந்த போட்டியின் ,தொடரின் இறுதி நாள் ஆட்டம் நாளை 4.30 மணிக்குத் தொடங்கும் .ஆட்டம் முழுமையாக நடந்தால் 98 ஓவர்கள் வரை வீசப்படும் .