சிட்னி டெஸ்ட்: இந்திய அணியின் கைப்பிடிக்குள் போட்டி

 

சிட்னி டெஸ்ட்: இந்திய அணியின் கைப்பிடிக்குள் போட்டி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது

-குமரன் குமணன்

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் என்கிற நிலையிலிருந்து இன்றைய ஆட்டத்தை தொடர்ந்தது. ஸ்கோர் 329ஆக இருந்தபோது விஹாரி 42 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்று விளையாட வந்தது முதல் தடுமாற்றத்துடன் காணப்பட்ட விஹாரி, தான் எதிர்கொண்ட 96ஆம் பந்தில் ஒரு ஸ்வீப் ஷாட் ஆட முயன்று லியோன் பந்துவீச்சில் லபுசாஞ்சேவிடம் கேட்ச் ஆனார். புஜாரா -விஹாரி கூட்டணி 101 ரன்களை எடுத்தது .

தனது நேற்றைய ஸ்கோரான 130 ரன்களோடு கூடுதலாக 63 ரன்கள் சேர்த்த புஜாரா 373 பந்துகளில் 22 பவுண்டரிகளோடு 193 ரன்களில் லியோன் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போதைய ஸ்கோர் 418-6.

உண்மையில் நான்கு ஓவர்களுக்கு முன் தான் லியோனின் பந்துவீச்சிலேயே க்வாஜா, புஜாரா கொடுத்த கடினமான ஸ்லிப் கேட்சை தவற விட்டார். அதில் பிழைத்த புஜாராவால் மேற்கொண்டு ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்நிலையில், விஹாரிக்கு அடுத்து வந்து ஒரு முனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட்டுடன் ஜடேஜா இணைந்துகொள்ள ஆரம்பமானது அதிரடி. குறிப்பாக ஆட்டத்தின் 163ஆம் ஒவரில் கம்மின்ஸ் பந்துவீச்சில் 4 பவுண்டரிகளை அடித்தார் ஜடேஜா.

பண்ட் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஓரு இந்திய விக்கெட் கீப்பர் அடித்த முதல் சதமாகவும் இது பதிவானது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் அடித்த அதிகபட்ச ரன்கள் 89 (ஃபரூக் என்ஜினியர், 1967 அடிலெய்டு டெஸ்ட்)

ஐடேஜா 114 பந்துகளில் 7 புவுண்டரி 1 சிக்சருடன் லியோன் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இந்தியா 167.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தபோது பண்ட், 189 பந்துகளில் 15 பவுண்டரி 1 சிக்ஸருடன் 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 149-வது ரன்னை அடித்தபோது, இந்தியாவுக்கு அப்பால் ஒரு இந்திய விக்கெட் கீப்பர் குவித்த அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தார். தோனி பாகிஸ்தானுக்கு எதிராக 2006-ஆம் ஆண்டு ஃபைசலபாத் நகரில் 148 ரன்கள் அடித்ததே இதுவரையிலான சாதனையாக இருந்தது.

இதையடுத்து, தனது இன்னிங்ஸை தொடங்கியது ஆஸ்திரேலியா. சிறிது நேரத்திலேயே ஷமி பந்துவீச்சில். க்வாஜா தந்த வாய்ப்பை தவற விட்டார் பண்ட். இன்றைய ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் ஸ்கோரை விட 598 ரன்கள் பின்தங்கியுள்ளது.

இந்த போட்டியில் இந்தியா தோற்பதற்பான சாத்தியக்கூறுகளை மொத்தமாக புறம் தள்ளிவிட்டது. ஒன்று இந்தியா வெற்றி பெறும் அல்லது போட்டி டிராவில் முடிந்துவிடும் சூழலே உள்ளது. மனித சக்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் ஏதாவது மிகப்பெரிய அதிசயம் நடந்தால் மட்டுமே ஆஸ்திரேலிய வெற்றி சாத்தியமாகும்.

ஆகவே கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் அடையப் போகும் முதல் தொடர் வெற்றி தெரிகிறது.”இன்னும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மழை பெய்யாதா ?” என (தோல்வியை தவிர்க்கும் எண்ணத்தில் ) ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் தொலைக்காட்சியில் விரக்தியுடன் கூடிய நகைச்சுவை செய்ததையும் பார்க்க முடிந்தது.

நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்க உள்ள மூன்றாம் நாள் ஆட்டத்தில், தொடக்கம் முதல் இந்திய பந்துவீச்சாளர் சிறப்பாக செயலாற்றினால், இந்த போட்டி அடுத்த 2 நாட்களில் முடிந்துவிடும் வாய்ப்பும் உள்ளது.