சாரதா சிட்ஃபண்ட் விவகாரம்: சிபிஐ மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

 

சாரதா சிட்ஃபண்ட் விவகாரம்: சிபிஐ மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சாரதா சிட்ஃபண்ட் விவகாரம் தொடர்பான சிபிஐ மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது

புதுதில்லி: சாரதா சிட்ஃபண்ட் விவகாரம் தொடர்பான சிபிஐ மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் அவர் ஆஜராகாததால், நேற்று மாலை கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றனர். சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திய மேற்குவங்க காவல்துறையினர், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

இத்தகவல் அறிந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக காவல் ஆணையர் ராஜீவ்குமாரின் வீட்டுக்கு வந்தார். தொடர்ந்து அவர் மத்திய அரசை கண்டித்தும், அரசியல் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது போராட்டம் இன்றும் தொடர்கிறது.

இதனிடையே, சாரதா சிட்ஃபண்ட் முறைகேடு வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மனு தாக்கல் செய்தது. மேலும் தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தலைமை நீதிபதி அமர்விடம் சிபிஐ தரப்பு முறையிட்டிருந்தது. இதனை ஏற்ற நீதிபதிகள், இந்த வழக்கு மீது நாளை (இன்று) விசாரணை நடைபெறும் என தெரிவித்தனர்.

முன்னதாக, நேற்றைய விசாரணையின் போது, ராஜீவ் குமாரை எந்த அடிப்படையில் விசாரிக்கச் சென்றீர்கள் என்றும் உரிய முன் அனுமதி எதுவும் பெற்றீர்களா என்றும் அடுக்கடுக்கான கேள்விகளை சிபிஐ-க்கு எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.