சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது பெற்ற பிரதமர் மோடி இப்படி ஒரு செயலை செய்யலாமா?

 

சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் விருது பெற்ற பிரதமர் மோடி இப்படி ஒரு செயலை செய்யலாமா?

விழாவில் பேசிய அன்டோனியோ குட்டரஸ், பருவநிலை மாற்ற அபாயத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் தலைவர் பிரதமர் மோடி என புகழாரம் சூடினார்

வாரணாசி: பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சாம்பியன் விருது பெற்ற பிரதமர் மோடி இப்படி ஒரு செயலை செய்யலாமா என சமூக வலைதளவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.

பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் பாரீஸ் உடன்படிக்கையைச் செயல்படுத்த முனைந்ததற்காகவும், 2022-ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நடவடிக்கை எடுத்ததற்காகவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் எனும் விருதை கடந்த ஆண்டு தில்லியில் நடைபெற்ற விழாவில் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் வழங்கி கவுரவித்தார்.

champions of earth award

விழாவில் பேசிய அன்டோனியோ குட்டரஸ், பருவநிலை மாற்ற அபாயத்தை உணர்ந்து, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வரும் தலைவர் பிரதமர் மோடி என புகழாரம் சூடினார். விருதை பெற்ற பின்னர் பேசிய பிரதமர் மோடி, இந்தியர்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதி பூண்டு இருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவை தேர்தலில் தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதற்கு முன்பாக நேற்று முன்தினம் மாலையில் வாரணாசி வந்த பிரதமர், திறந்தவெளி வாகனத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினார். அப்போது சாலை நெடுகிலும் திரண்டிருந்த பாஜக-வினர் ரோஜாப்பூக்களை அவர் மீது தூவி அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

modi

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்திற்கு சென்ற மோடி, பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, கங்கை நதியில் நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் ஆட்சிக்கு ஆதரவு அலை வீசுவதாக தெரிவித்தார். அதேபோல், பண்டல்கந்த் பகுதியில் பேசிய பிரதமர், இந்த அரசை மீண்டும் நீங்கள் தேர்ந்தெடுத்தால், குடிநீர் கிடைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

இந்நிலையில், வாரணாசி நகரில் 30 சதவீதம் பேர் குடிநீரை, குழாய் மூலமாக பெற முடியாத நிலை இருக்கும் போது, மோடியின் பேரணிக்காக வாரணாசியின் சாலைகளை கழுவ சுமார் 1.4 லட்சம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தப்பட்டதாக “தி டெலிகிராப்” நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Picture Courtesy: The Telegraph

modi varanasi water

பிரதமரின் வருகையால் மூத்த அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததால், இதனை செய்தோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், சுமார் 300-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் சாலையை சுத்தமாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இன்னும் குடங்களை கையில் வைத்துக் கொண்டு தண்ணீருக்கு அல்லாடும் நிலை தான் உள்ளது. இரவும் பகலும் மாறி மாறி பூமியை துளையிடும் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. இருப்பினும், எத்தனை அடி சென்றாலும் தண்ணீர் கிடைக்கவில்லை என்ற சூழலே உண்மை. நாடு முழுவதும் நிலத்தடி நீர் வற்றி வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் குடிப்பதற்கு சுத்தமான நீரே கிடைப்பதில்லை. பல கி.மீ தூரங்களுக்கு நடந்து சென்று ஒரு குடம் தண்ணீரை பெண்கள் எடுத்து வருகின்றனர்.

bihar water crisis

இந்த நிலையில், நாட்டின் பிரதமராக இருக்கும் ஒருவர், அதுவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டவராக காட்டிக் கொள்பவர். இத்தனைக்கும் மாறாக, பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சாம்பியன் விருது பெற்ற பிரதமர், குடிநீருக்காக மக்கள் அல்லாடும் நாட்டில், இத்தனை லட்சம் லிட்டர் குடிநீரை இந்த காரணத்துக்காக பயன்படுத்தலாமா, ஒருவேளை அவருக்கு தெரியாமல் நடந்திருந்தால் அதனை கண்டித்து அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.