சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாகி போன காஷ்மீர் மக்கள் நிலை

 

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாகி போன காஷ்மீர் மக்கள் நிலை

காஷ்மீரில் நேற்று நண்பகல் 12 மணி முதல் போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள் செயல்பட தொடங்கின. அதேசமயம் பணம் கட்டாததால் அவுட் கோயிங் இணைப்புகளை செல்போன் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்த 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி நீக்கியது. அதற்கு முந்தைய நாள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். மேலும் லேண்ட்லைன், மொபைல் இணைப்புகள் உள்பட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டது.

இன்டர்நெட் கட்

நாட்கள் செல்ல செல்ல காஷ்மீரில் இயல்பு நிலை படிப்படியாக திரும்ப தொடங்கியது. இதனையடுத்து முதலில் லேண்ட்லைன் இணைப்புகள் வழங்கப்பட்டது. மேலும் காவலில் வைக்கப்பட்டு இருந்த தலைவர்கள் தற்போது படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்  திங்கட்கிழைமை (நேற்று ) நண்பகல் 12 மணி முதல் போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள் மீண்டும் செயல்பட தொடங்கும் என கடந்த சில தினங்களுக்கு முன் காஷ்மீர் அரசு நிர்வாகம் உறுதி அளித்தது.

மொபைல்  சேவை

அதன்படி, சுமார் 72 நாட்களுக்கு பிறகு நேற்று காஷ்மீரில் போஸ்ட்பெய்ட் மொபைல் சேவைகளை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் வழங்கின. ஆனாலும், சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையாகி போனது காஷ்மீர் மக்களின் நிலை. 2 மாதங்களுக்கு மேலாக கட்டணம் செலுத்தாததால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல வாடிக்கையாளர்களின் அவுட்கோயிங் கால் வசதியை நிறுத்தி வைத்துள்ளன. மேலும் இன்டர்நெட் சேவை இன்னும் வழங்கபடாததால் வாடிக்கையாளர்கள் உடனடியாக மொபைல் பில் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தற்சமயத்துக்கு இன்கம்மிங் கால்களை மட்டுமே அட்டன் செய்து பெரும்பான்மையான காஷ்மீரிகள் பேசி வருகின்றனர்.