சாதி திமிருக்கு எதிராக நீதி கேட்க திரள்வோம்: இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்!

 

சாதி திமிருக்கு எதிராக நீதி கேட்க திரள்வோம்: இயக்குநர் பா.ரஞ்சித் வேண்டுகோள்!

கிருஷ்ணகிரி அருகே படுகொலை செய்யப்பட்ட இளம் காதல் ஜோடியான நந்தீஸ் – சுவாதி தம்பதியரின் படுகொலைக்கு நீதி கேட்க திரள்வோம் என பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை: கிருஷ்ணகிரி அருகே படுகொலை செய்யப்பட்ட இளம் காதல் ஜோடியான நந்தீஸ் – சுவாதி தம்பதியரின் படுகொலைக்கு நீதி கேட்க திரள்வோம் என பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் – சூளகிரி அருகே உள்ள சூடுகொண்ட பள்ளி வெங்கடேஷபுரத்தைச் சேர்ந்தவர் நத்தீஷ். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் வீட்டருகே உள்ள ஹார்டுவேர் கம்பெனியில் பணிபுரிந்து வந்தபோது இவருக்கும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.

இந்த காதல் விவகாரம் குறித்து சுவாதியின் வீட்டிற்கு தெரிய வந்ததையடுத்து, மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அந்த எதிர்ப்புகளை மீறி காதலர்கள் இருவரும் திருமணம்  செய்து கொண்டு, ஓசூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே காவிரி ஆற்றங்கரையோரம் அழுகிய நிலையில் இந்த தம்பதியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலையை தாம் தான் செய்ததாக சுவாதியின் தந்தை போலீசில் சரணடைந்துள்ளார்.

இந்த துயர சம்பவம் குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் ரஞ்சித், “இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை…வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!!! வாய் பேச முடிந்த #நந்தீஸ்_சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!!” என பதிவிட்டுள்ளார்.

மேலும், துடைத்து அப்புற படுத்த வேண்டிய சாதி கேவலத்துக்கு எதிராக முழுவீச்சில் வினையாற்றுவோம்..இன்னும் எத்தனை உயிர்களை ஆணவ சாதி தின்னப்போகிறது? இந்த கொடுந்துயருக்கு இப்போதே முடிவு கட்டுவோம்! என்று தமிழ் ஊடகங்களுக்கு பா.ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.