சஸ்பென்சை உடைத்த தேவகவுடா; தும்கூர் தொகுதியில் போட்டி!

 

சஸ்பென்சை உடைத்த தேவகவுடா; தும்கூர் தொகுதியில் போட்டி!

குடும்ப அரசியலால் சிக்கி தவித்து வந்த தேவகவுடா, நீண்ட தேடலுக்கு பின்னர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தும்கூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

பெங்களூரு: குடும்ப அரசியலால் சிக்கி தவித்து வரும் தேவகவுடா, நீண்ட தேடலுக்கு பின்னர், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தும்கூர் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா, இதுவரை 15 முறை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 13 முறை வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு தொடர்ந்து வெற்றி வாய்ப்பை தேடி தந்த தொகுதியான ஹசன் மக்களவை தொகுதியை அவருடைய பேரனனான பிரஜ்வால் ரேவன்னாவுக்கு ஒதுக்கியுள்ளார்.

deve gowda

அதேபோல, மற்றொரு தொகுதியான மாண்டியா தொகுதியை மற்றொரு பேரனும் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த முறை எந்தத் தொகுதியில் தேவகவுடா போட்டியிடவுள்ளார் என்று கேள்வி பரவலாக எழுந்தது.

kumarasamy

பெங்களூரு வடக்கு தொகுதியில் அவர் போட்டியிட மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்குள் அழுத்தம் எழுந்தது. ஆனால், கூட்டணி கட்சியான காங்கிரஸ் குறித்த பயம் காரணமாக அத்தொகுதி கைவிடப்பட்டது. பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் தேவகவுடாவின் பரம வைரியான காங்கிரஸ் கட்சியின் சித்தராமையாவுக்கு ஆதரவாக இருப்பதால், கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையாவின் வீழ்ச்சிக்கு அவர்கள் பழிவாங்கக் கூடும் என்பதால் அத்தொகுதி கைவிடப்பட்டதாக தெரிகிறது.

siddaramaiah

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தும்கூர் தொகுதியில் தேவகவுடா போட்டியிடவுள்ளதாகவும், நாளை மறுநாள் அவர் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தும்கூர் சிட்டின் எம்.பி.,-யான முத்தஹனுமே கவுடா வருகிற திங்கள்கிழமை தும்கூர் தொகுதியில் போட்டியிட தான் வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்த சில மணி நேரங்களில் தேவகவுடா அந்த தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் சுயேட்சையாக களம் கண்டால் அது காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

congress jds

ஏற்கனவே தேவகவுடாவின் குடும்ப உறுப்பினர்களுக்கு மாண்டியா மற்றும் ஹசன் தொகுதி கொடுக்கப்பட்டுள்ளதால், மதசார்பற்ற ஜனதாதள கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். அதேபோல், இந்த தொகுதிகள் மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் அதிருப்தியில் உள்ளனர்.

sumalatha

மாண்டியா தொகுதியில் சீட் மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மறைந்த நடிகர் அம்பரீஸ் மனைவி சுமலதா சுயேட்சையாக களம் காண்கிறார். தற்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் தும்கூர் தொகுதியின் எம்.பி.,-யாக இருக்கும் அதனை  மதசார்பற்ற ஜனதாதளத்துக்கு கொடுக்கப்பட்டது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது அக் கூட்டணிக்கு பல்வேறு இடங்களில் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இதையும் வாசிங்க

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: கோவை எஸ்.பி மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல்!