சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி

 

சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க உயர் நீதிமன்றம் அனுமதி

அரசி தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசான ரூ.1000 வழங்கலாம் என அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை: அரசி தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசின் பொங்கல் பரிசான ரூ.1000 வழங்கலாம் என அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையடுத்து, ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலை கடைகள் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ 1000 வழங்க தடைவிதிக்க வேண்டும் என கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், பொங்கல் பரிசாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 1000 வழங்கக்கூடாது எனவும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. அரிசி, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்க தடை ஏதும் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியிருந்தது.

நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதில் சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரப்பட்டிருந்தது. இந்த முறையீட்டை ஏற்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், இதுகுறித்து மேல்முறையீடு செய்யலாம் என கூறியது.

இதனைத்தொடர்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்மறயீட்டு மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் (NPHH-S) ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது, அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில் பொங்கல் பரிசை அதில் செலுத்துவதை விடுத்து 8 முதல் 10 மணிநேரம் காக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன? ஒரு நாளைக்கு ரூ500 சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், அரிசிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காமல் இலவசமாக வழங்குவது ஏன்? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இலவசங்கள் வழங்கப்படும்? என சரமாரி கேள்விகளையும் நீதிமன்றம் எழுப்பியது. அதற்கு பதிலளித்த தமிழக அரசு, பரிசுப் பொருட்கள் வழங்குவதில் அடுத்த ஆண்டிற்குள் புதிய விதிகள் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தது.