சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம்: நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

 

சர்கார் படத்திற்கு எதிராக போராட்டம்: நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, சில காட்சிகளை நீக்க கோருவது சட்டத்திற்கு புறம்பான செயல்கள் என நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்

சென்னை: தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, சில காட்சிகளை நீக்க கோருவது சட்டத்திற்கு புறம்பான செயல்கள் என நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் பேசும் படமாக உருவாகியுள்ளது. படத்தின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமியின் காதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் கோமளவள்ளி என்ற பெயர், தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், நேற்றைய தினம் திரையங்குகளில் சில காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், சர்கார் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், படத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த கமல்ஹாசன், முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார்  படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை  ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள்  கூட்டம் விரைவில் ஒழியும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.