சர்கார் திரைப்படத்தை வம்புக்கு இழுத்த தமிழிசை!!!

 

சர்கார் திரைப்படத்தை வம்புக்கு இழுத்த தமிழிசை!!!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் சர்கார் திரைப்படத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை வம்புக்கு இழுத்துள்ளார்

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் சர்கார் திரைப்படத்தை பாஜக தமிழக தலைவர் தமிழிசை வம்புக்கு இழுத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் தீபாவளி தினமான நாளை ரிலீசாக உள்ளது.

sarkar

முன்னதாக, இத்திரைப்படத்தின் கதை செங்கோல் கதையில் இருந்து திருடப்பட்டது என சர்ச்சை எழுந்தது. தொடர்ந்து, சர்கார் கதை திருடப்பட்டதாக கூறி, அந்த கதைக்கு உரிமைக் கோரி வருண் ராஜேந்திரன் என்பவர் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்து பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சர்கார் படக்குழு மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பு மனுதாரர் தரப்புடன் சமரசம் ஆனதால் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். இதையடுத்து, செய்தியாளரகளை சந்தித்த கதைக்கு உரிமை கோரிய வருண், விஜய் தலைமையில் ‘சர்கார்’ அமைய தனது ‘செங்கோலை’ அளிப்பதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கள்ள ஓட்டு என்பதை தவிர ‘செங்கோல்’ கதைக்கும், ‘சர்கார்’ கதைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனினும் உதவி இயக்குனர் ஒருவரை ஊக்குவிக்கும் வகையில் டைட்டிலில் அவரது பெயரை சேர்க்க ஒப்புக் கொண்டோம். மற்றபடி சர்கார் படத்தின் கதை என்னுடையது என்பதில் எந்த மாற்றமும் இல்லை. வதந்திகளை பரப்ப வேண்டாம் என இப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் விளக்கமளித்தார்.

sarkar

இந்நிலையில், முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும், கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என நடிகர் விஜய் மற்றும் சர்கார் திரைப்படம் குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை விமர்சித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, சர்காருக்கு நான் எதிராக இல்லை. திரைத் துறையிலேயே நேர்மையை கடைப்பிடிக்க முடியாதவர்கள், அரசியலுக்கு வந்து மிகப் பெரிய நேர்மையான ஆட்சியைக் கொண்டுவர முடியும் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. திரைப்படத்திலேயே சர்காரை சரியாக நிர்வகிக்க முடியாதவர்கள் மக்களுக்காக சிறந்த சர்காரை உருவாக்க முடியும் எனப் பேசுவதெல்லாம் திரைப்படத்தைப் போன்ற ஒரு மாயை மட்டுமே என்றார்.

முன்னதாக, சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், நான் முதலமைச்சரானால்…’முதலமைச்சராக நடிக்க மாட்டேன்…உண்மையாக இருப்பேன்’.. கட்சியின் தலைவன் சரியாக இருந்தால்தான் கட்சியினர் சரியாக இருப்பார்கள் தலைவன் மோசமாக இருந்தால் கட்சியும் மோசமாக இருக்கும். நெருக்கடிகள் ஒருவனை தலைவனாக மாற்றும். அவன் கீழ் நடக்கும் சர்கார் சிறப்பானதாக இருக்கும் என பேசினார். அவரது இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது. அதேசமயம், விஜய்யின் அரசியல் பிரவேசத்தை எதிர்நோக்கியிருக்கும் அவரது ரசிகர்களை இந்த பேச்சு உற்சாகப்படுத்த தவறவில்லை.

sarkar

கடந்த 2011-ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த காவலன் திரைப்படத்தில் இருந்து அவரது ஒவ்வொரு திரைப்படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. கடைசியாக நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனங்களால் அத்திரைப்படத்திற்கு பாஜக-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது, சர்க்காரையும் தமிழிசை வம்புக்கு இழுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.