சர்கார் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

சர்கார் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சர்கார் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : சர்கார் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. விஜய், கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி, ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ளது.

இப்படத்தின் முதல் நாள் முதல் ஷோ ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. வழக்கமாக உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படங்களின் ப்ரீமியர் காட்சிகளை  வைத்துக் கொண்டு தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள், புதுப்படத்தின் ஹெச்டி பிரிண்டை திருட்டுத்தனமாகப் படம்பிடித்து தங்களது இணையதளங்களில் லீக் செய்வர். இதனைத் தடுக்கும் விதமாக உலகம் அமெரிக்க உட்பட 80 நாடுகளில் ஒரே நேரத்தில் ‘சர்கார்’ திரைப்படம் ரிலீசாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகஸ்தர்களிடம் தெரிவித்துள்ளது.

சர்கார் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சன் நெட்வொர்க் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணகுமார் தடை விதித்துள்ளார். இணையதளங்கள் சர்கார் திரைப்படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது எனக் கூறியுள்ள நீதிபதி  3715 இணையதளங்களுக்குத் தடை விதித்து  உத்தரவிட்டுள்ளார்.