சர்கார் சர்ச்சை: அரிவாளோடு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்: கைது செய்ய தீவிரம் காட்டும் காவல்துறை!

 

சர்கார் சர்ச்சை: அரிவாளோடு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள்: கைது செய்ய தீவிரம் காட்டும் காவல்துறை!

சர்கார் பட பேனர் கிழிப்பு விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளோடு அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய தமிழக காவல்துறை  முனைப்பு  காட்டி வருகிறது

சென்னை: சர்கார் பட பேனர் கிழிப்பு விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளோடு அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய தமிழக காவல்துறை  முனைப்பு  காட்டி வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘சர்கார்’ திரைப்படம் கடும் சர்ச்சைகளைக் கடந்து தீபாவளிக்கு ரிலீசானது. சர்கார் படம் வெளியான இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதையடுத்து தமிழக அரசின் இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட விஷயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்ட இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.

முன்னதாக சர்கார் சர்ச்சையினால்  இளைஞர்கள் இருவர் விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளுடன் அதிமுகவினருக்கு மிரட்டல் விடுக்கும் தொனியில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில்  சர்கார் பட பேனர் கிழிப்பு விவகாரத்தில் விஜய் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அரிவாளோடு அதிமுகவினருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் 23452348, 23452350 என்ற எண்களில் மக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம் என தமிழக காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.