‘சர்கார்’ கதை ராஜேந்திரனுடையது: ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புதல்!

 

‘சர்கார்’ கதை ராஜேந்திரனுடையது: ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புதல்!

‘சர்கார்’ திரைப்படத்தின் கதை ராஜேந்திரனுடையது என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: ‘சர்கார்’ திரைப்படத்தின் கதை ராஜேந்திரனுடையது என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை தன்னுடையது என உரிமை கோரி வருண் ராஜேந்திரன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். அவரது புகாரை விசாரித்த எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ், இரு கதைகளும் ஒன்று தான் எனக் கூறி அறிக்கை வெளியிட்டார்.

இதனிடையே, ’செங்கோல்’ என்ற தனது கதையை திருடி ‘சர்கார்’ திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருப்பதாக வருண் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று காலை தொடங்கியது. வழக்கு விசாரணையை நேரில் காண இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் நீதிமன்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகததால் வழக்கு சற்று நேரம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வழக்கு அல்லாது, தனியாக மனுதாரர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த உடன்பாட்டில், ‘சர்கார்’ கதை வருண் ராஜேந்திரனுடைய கதை என்றும்,  படத்தின் டைட்டிலில் நன்றி என்று குறிப்பிட்டு வருண் பெயரை வெளியிடவும் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சர்கார் படக்குழு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வழக்கின் சட்டரீதியான தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.