‘சர்கார்’ கதை திருட்டு: குடும்பத்துக்குள் பிரச்னை வரும் என்றாலும், கடமையை செய்தேன்-பாக்யராஜ்!

 

‘சர்கார்’ கதை திருட்டு: குடும்பத்துக்குள் பிரச்னை வரும் என்றாலும், கடமையை செய்தேன்-பாக்யராஜ்!

தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்பட விவகாரத்தால் தனக்கு குடும்பத்திலும் பிரச்னை வரும் என்று தெரிந்தாலும் கடமையை செய்தேன் என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்பட விவகாரத்தால் தனக்கு குடும்பத்திலும் பிரச்னை வரும் என்று தெரிந்தாலும் கடமையை செய்தேன் என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ’சர்கார்’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவ.6ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், வருண் ராஜேந்திரன் என்பவர் ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடையது என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த எழுத்தாளர்கள் சங்க தலைவர் கே.பாக்யராஜ் தலைமையிலான குழு வருணின் ‘செங்கோல்’ படத்தின் கதையும், முருகதாஸின் ‘சர்கார்’ படத்தின் கதையும் ஒன்று தான் என அறிக்கை வெளியிட்டது.

sarkarstoryscam

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கே.பாக்யராஜ், கடந்த 2007ம் ஆண்டு வருண் ராஜேந்திரன் ‘செங்கோல்’ என்ற தலைப்பில் தனது கதையை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டது. இது குறித்து இயக்குநர் முருகதாஸிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்த முயற்சித்தோம், அவர் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்துக் கொள்வதாக கூறிவிட்டார். தற்போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்த விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஸ், வருணுக்கு இடையே இருப்பது ஒரு பிரச்னை தான் எனக்கு குடும்பத்தில் பிரச்னை இருக்கிறது. எனது மகன் விஜய்யின் தீவிர ரசிகன், எனது மனைவி தற்போது தான் சன் டிவியில் சீரியலில் நடிக்கிறார். நட்பு ரீதியாக விஜய், விஜய்யின் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்பன போன்ற பல பிரச்னைகளில் சிக்கியிருக்கிறேன்.

எனினும், எழுத்தாளர்கள் சங்க தலைவர் பதவியில் இருப்பதால், எனது பொறுப்பை உணர்ந்து சார்பு இல்லாமல் கடமையை செய்திருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகைக்கு ‘சர்கார்’ வெளியாகவுள்ள நிலையில், கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருப்பது தளபதி ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.