சர்கார் கதை திருடப்பட்டது அல்ல: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

 

சர்கார் கதை திருடப்பட்டது அல்ல: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

சர்கார் திரைப்படத்தின் கதை திருடப்பட்டது அல்ல என எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னை: சர்கார் திரைப்படத்தின் கதை திருடப்பட்டது அல்ல என எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம் கொடுத்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், பழ.கருப்பையா, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் கதைக்கு உரிமை கோரி வருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். சர்கார் படத்துக்கு தடை கோரி வருண் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சர்கார் திரைப்படத்துக்கு இடைக்கால தடை ஏதும் பிறப்பிக்க முடியாது என்றும் இதுகுறித்து வரும் அக்.30ம் தேதிக்குள் பதிலளிக்க பட தயாரிப்பாளர் மற்றும் தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கத்துக்கு உத்தரவிட்டது.

அதனையடுத்து, செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இக்கதை திருடப்பட்டது அல்ல. மொத்தமும் என்னுடைய கதைதான் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், சர்கார் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சர்கார் படத்தின் கதை திருடப்பட்டது அல்ல. கள்ள ஓட்டு என்ற ஒரு பிரபலமான ஒற்றை வரியை வைத்தே கதை உருவாக்கப்பட்டது. ஒரு நிகழ்வைப் பற்றி யார் வேண்டுமானாலும் சிந்திக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.