சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 335 புள்ளிகள் வீழ்ந்தது

 

சரிவை சந்தித்த பங்கு வர்த்தகம்! சென்செக்ஸ் 335 புள்ளிகள் வீழ்ந்தது

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் கலவரமாக இருந்தது. சென்செக்ஸ் 335 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வர்த்தகத்தின் இடையே உயர்ந்தது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் முன்னேற்றமான நிலை போன்ற சாதகமான நிலவரங்கள் காணப்பட்ட போதும் இன்று பங்குச் சந்தைகளில் பலத்த சரிவு ஏற்பட்டது. கடந்த வாரம் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்றாக இருந்தது. அதனால் பல நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்தது. இதனையடுத்து லாப நோக்கத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்ததும் பங்கு வர்த்தகத்தின் சரிவுக்கு ஒரு காரணமாக அமைந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சன்பார்மா, பஜாஜ் ஆட்டோ, இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் மகிந்திரா அண்டு மகிந்திரா உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. அதேவேளையில், இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், எச்.சி.எல். டெக்னாலஜிஸ், டெக் மகிந்திரா மற்றும் மாருதி உள்பட 15 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பங்கு வர்த்தகம் சரிவு

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,259 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,296 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 204 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.149.36 லட்சம் கோடியாக சரிந்தது. 

மும்பை பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 334.54 புள்ளிகள் வீழ்ந்து 38,963.84 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 73.50 புள்ளிகள் சரிந்து 11,588.35 புள்ளிகளில் முடிவுற்றது.