சம்மதிக்க மறுத்த ரஷ்யா……சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி… பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு…

 

சம்மதிக்க மறுத்த ரஷ்யா……சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி… பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு…

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ரஷ்யா மறுத்து விட்டதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. இதனால் நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை சமீபகாலமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் சீன பொருளாதார முடக்கம் மற்றும் மந்தமான சர்வதேச வர்த்தக நிலை போன்றவையே இதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மேலும் குறைந்தது.

ஓபெக் கூட்டமைப்பு

விலை சரிவை கட்டுப்படுத்த கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு (ஓபெக்) நீண்ட நாட்களுக்கு பெரிய அளவில் உற்பத்தியை குறைக்க  திட்டமிட்டன. மேலும் தங்களது கூட்டணியில் உள்ள ரஷ்யா உள்ளிட்ட இதர நாடுகளிடமும் உற்பத்தி குறைப்பு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ள ஒபெக் முயற்சி மேற்கொண்டது. ஆனால் உற்பத்தியை குறைக்க ரஷ்யா மறுத்து விட்டது.

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

இந்த தகவல் வெளியானதையடுத்து சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை (1 பேரலுக்கு)  6 சதவீதத்துக்கு மேல் சரிந்து 47 டாலராக குறைந்தது. கச்சா எண்ணெய் விலை சரிவால், வருமானத்துக்கு எண்ணெய் ஏற்றுமதியை மட்டுமே நம்பியிருக்கும் அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா போன்ற அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி நாடுகளின் பெட்ரோலிய இறக்குமதி செலவினம் குறையும். சர்வதேச சந்தை விலை நிலவரம், ரூபாயின் வெளிமதிப்பு போன்றவற்றை கணக்கில் கொண்டு நம் நாட்டில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.