சமையல் கியாஸ் சப்ளையில் சிக்கல்! 15 நாட்கள் வரை தாமதமாகும் கியாஸ் சிலிண்டர் டெலிவரி

 

சமையல் கியாஸ் சப்ளையில் சிக்கல்! 15 நாட்கள் வரை தாமதமாகும் கியாஸ் சிலிண்டர் டெலிவரி

சவுதியின் அராம்கோ ஆலையில் நடந்த தீவிரவாத தாக்குதலால், நம் நாட்டில் எல்.பி.ஜி. சப்ளை நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் டெலிவரி செய்ய 15 நாட்கள் வரை ஆகிறது.

நம் நாட்டின் மொத்த எல்.பி.ஜி. தேவையில் 50 சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் எல்.பி.ஜி. இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் நம்ம நாடு உள்ளது. சவுதி அரேபியா, கத்தார் மற்றும் குவைத் ஆகிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்துதான் அதிகளவில் எல்.பி.ஜி. இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவது மற்றும் மத்திய அரசு சமையல் எரிவாயு பயன்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவது போன்ற காரணங்களால் தற்போது நாளுக்கு நாள் சமையல் கியாசுக்கான தேவை அதிகரித்துள்ளது.

அராம்கோ ஆலை தாக்குதல்

இந்த சூழ்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் சவுதியின் அராம்கோ ஆலையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த ஆலை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் உற்பத்தியும் தடைப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் அந்த ஆலை மீண்டும் முழு அளவில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என அராம்கோ நிறுவனம் தெரிவித்து இருந்தது. தாக்குதலால் இந்தியாவுக்கான எல்.பி.ஜி. சப்ளையை அராம்கோ நிறுவனம் ஒத்திவைத்தது.

இதனால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் வேறு நாடுகளில் எல்.பி.ஜி. வாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதேசமயம் இறக்குமதி பாதிக்கப்பட்டதால் உள்நாட்டில் சமையல் கியாஸ் சிலிண்டர் விநியோகம் பாதிக்கபட்டுள்ளது.

சமையல் கியாஸ் சிலிண்டர் டெலிவரி

மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சமையல் கியாஸ் முன்பதிவில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சில மாநிலங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய 15 நாட்கள் வரை ஆகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.