சமூக பரவுதல் என்ற நிலையை அடைகிறதா கொரோனா? – இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

 

சமூக பரவுதல் என்ற நிலையை அடைகிறதா கொரோனா? – இந்தியாவை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

சமூக பரவல் என்ற நிலைக்கு சென்றதைக் காணும்போது, கொரோனா வைரஸ் மூன்றாவது கட்டத்தை எட்டிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

டெல்லி: சமூக பரவல் என்ற நிலைக்கு சென்றதைக் காணும்போது, கொரோனா வைரஸ் மூன்றாவது கட்டத்தை எட்டிவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாத நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லி அருகே நொய்டாவில் எந்த ஒரு வெளிநாட்டுப் பயணமும் மேற்கொள்ளாத 47 வயது பெண்மணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது எல்லாம் எது நடக்கக் கூடாது என்று மக்கள் வேண்டி வந்தார்களோ, அது நடந்துவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ttn

கொரோனா பாதிப்பு வந்துகொண்டிருக்கிறது, பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருக்கும்போதே நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஆனால், பாதிப்பு இல்லை, வெயில் வந்துவிட்டது அதனால் கொரோனா பரவாது என்று சாக்கு சொல்லிக் கொண்டிருந்தது சுகாதாரத் துறை.

தற்போது பாதிப்பின் தீவிரத்தைப் பார்த்து ஒவ்வொரு மாநிலமாக முழு அடைப்பை அமல்படுத்தி வருகிறது. இப்போது கூட பொருளாதார அவசர நிலை வரவில்லை, ஆதார் – பான் கார்டு இணைப்புக்கு அவகாசம் என்று பேசிக் கொண்டிருக்கிறார் மத்திய அமைச்சர்.

பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ள தீர்வு வழங்காமல் மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கியிருக்க வேண்டும் என்று கூறுவது சரியில்லை என்று ஆளும் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் அது பற்றி அரசின் காதில் கேட்கவே இல்லை. இதன் விளைவு மக்கள் வெளியே சர்வ சாதாரணமாகக் கூடுகின்றனர். இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு என்றால், காலையில் 9 மணிக்கு பல பெண்கள் வேலைக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்திருக்கிறார்கள். இவர்கள் 6 மணிக்கு பணியை முடித்து எப்படி வீடு திரும்புவார்கள்?

எந்த ஒரு யோசனையும் திட்டமிடுதலுமின்றி அரசு செயல்பட்டு வருவதையே இத்தனை நிகழ்வுகளும் காட்டுகின்றன. இதன் பிறகும் அரசுக்கு விழிப்புணர்வு வந்தது போல் இல்லை. இதன் விளைவாக கொரோனா பாதிப்பு நகரங்களிலிருந்து கிராமங்கள் வரை சென்றிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரத்தியேக மருத்துவமனை அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைமை கையை மீறி போய்விட்டது போலவே உள்ளது… இனியாவது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!