சமூகநீதி, இட ஒதுக்கீடு, பெண் கல்வியிலும் தமிழக அரசின் நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும்- கி.வீரமணி

 

சமூகநீதி, இட ஒதுக்கீடு, பெண் கல்வியிலும் தமிழக அரசின் நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும்- கி.வீரமணி

மும்மொழிக்கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்ததற்கு திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்றுள்ளார். அதே நேரத்தில், சமூகநீதி, இட ஒதுக்கீடு, பெண் கல்வியிலும் தமிழக அரசின் நிலைப்பாட்டினை அறிவிக்க வேண்டும் என்று மீண்டும் ஒரு கோரிக்கையையும் வைத்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையினால் இரு மொழிக் கொள்கை மாநிலமாக இருந்த தமிழ்நாடு இனி மும்மொழிக் கொள்கையை ஏற்றுச் செயல்படுத்தப் பட கட்டாயம் ஆக்கப்படும் என்பதால், அறிஞர் அண்ணா ஆட்சியில், சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இருமொழித் திட்டத்தினை – கலைஞரும், எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வர்களாக இருந்து தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்த நிலைப்பாட்டினை இவ்வாட்சி கைவிடக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தார் கி.வீரமணி .

இந்நிலையில், தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவி்த்திருந்தார்.

முதல்வரின் அறிவிப்புக்கு தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், ‘’தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதிய கல்விக் கொள்கை அறிவித்துள்ள மும்மொழித் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று இன்று (3.8.2020) திட்டவட்டமாக அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்’’என்று கி.வீரமணியும் டுவிட்டர் மூலம் தனது வரவேற்பை தெரிவித்தார்.

அவர் மேலும், ’’இறுதிவரை உறுதியான தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாகவே இருக்கவேண்டும். இதோடு மட்டுமல்ல, சமூகநீதி, இட ஒதுக்கீடு, பெண் கல்வி போன்றவற்றில் எதுவும் கூறாத கல்விக் கொள்கை, பல நுழைவுத் தேர்வுகள் – இவைபற்றியும் தமிழக அரசு தனது உறுதியான கருத்தையும், நிலைப்பாட்டினையும் அறிவித்தலும் அவசியம்’’என்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.