சமஸ்கிருதம் சொல்லித்தர இஸ்லாமியரா? – கொந்தளித்த பல்கலை. மாணவர்கள்!

 

சமஸ்கிருதம் சொல்லித்தர இஸ்லாமியரா? – கொந்தளித்த பல்கலை. மாணவர்கள்!

பணாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத விரிவுரையாளராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புகழ்பெற்ற பணாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத விரிவுரையாளராக இஸ்லாமியர் ஃபெரோஸ் கான் என்பவர் நியமிக்கப்பட்டார்

பணாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத விரிவுரையாளராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
புகழ்பெற்ற பணாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருத விரிவுரையாளராக இஸ்லாமியர் ஃபெரோஸ் கான் என்பவர் நியமிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள சமஸ்கிருத பிரிவுக்கும் பூட்டுப் போட்டுள்ளனர்.

banaras hindu university

இஸ்லாமிய விரிவுரையாளரை பதவி நீக்கம் செய்து, புதிதாக ஒருவரை அந்த இடத்தில் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி துணை வேந்தர் அலுவலகத்துக்கு எதிரே அமர்ந்து பஜனை பாடல்களைப் பாடி தங்கள் எதிர்ப்பை இந்த மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை வகுப்புகளுக்கு செல்லப்போவது இல்லை என்றும் அறிவித்துள்ளனர். 
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிருஷ்ண குமார் என்ற மாணவர் கூறுகையில், “நாங்கள் வேறு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிராகவும் போராட்டம் நடத்தவில்லை. எங்கள் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்துகிறோம். இது வழக்கமான மற்ற துறைகளைப் போன்றது இல்லை. இது சமஸ்கிருதம் – வேதம் – தர்மம்… நாங்கள் எங்கள் கலாச்சாரத்துக்காக போராடுகிறோம், ஒரு மொழிக்காக இல்லை” என்றார்.
பல்கலைக் கழக உயர் அதிகாரி ஓ.பி.ராய் கூறுகையில், “விரிவுரையாளர் நியமனம் அனைத்து விதிகளையும் பின்பற்றித்தான் செய்யப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு மிகச் சரியான நபர் அவர் என்பதால்தான் தேர்வு செய்யப்பட்டார். இந்த நியமனம் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று மாணவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இந்த பல்கலைக் கழகம் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பல்கலைக் கழக விதிகள் அடிப்படையில் மட்டுமே இயங்குகிறது. மாணவர்களுக்கு இதில் பிரச்னை என்றால் அது பற்றி பரிசீலனை செய்கிறோம்… ஆனால் அவர்கள் சொல்வதுதான் சரி என்று மாணவர்கள் நினைக்கின்றனர்.

firoz khan

இந்த பல்கலைக் கழகம் தன்னுடைய சுய விதிமுறைகள் அடிப்படையில் இயங்குகிறது, அதன் அடிப்படையிலேயே நாங்கள் இயங்குகிறோம்” என்றார்.
பல்கலைக் கழகம் இந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “எந்த மத பாகுபாடுமின்றி அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கற்பிக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும் என்ற பணாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் நோக்கத்தின் நிறைவேற்ற செயல்பட்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பின்னணி கொண்ட ஏ.பி.வி.பி, இந்து மகாசபா மற்றும் இந்து வாகினி உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு சில பேராசிரியர்களும் துணை புரிவதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்காமல் விடுதியில் உள்ள மாணவிகளையும் இந்த போராட்டத்தில் பங்கேற்கும்படி சில விரிவுரையாளர்கள் கூறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.