சபரிமலை விவகாரம்: 144 தடை உத்தரவு நீட்டிப்பு; சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு

 

சபரிமலை விவகாரம்: 144 தடை உத்தரவு நீட்டிப்பு; சீராய்வு மனுத்தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஐயப்ப பக்தர்கள், பந்தளம் அரச குடும்பத்தினர், கோயில் தந்திரிகள், இந்து அமைப்புகள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் அறிவித்தது. அத்துடன் இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த போவதாகவும் அறிவித்திருந்தது. மேலும், கோயில் நடை திறக்கும்போது பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கேரள அரசு அறிவித்தது.

தொடர்ந்து, தீர்ப்பிற்குப் பின் முதன்முறையாக கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. ஆனால், பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, கோயிலுக்கு வந்த பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கேரள காவல்துறை கைது செய்துவருகிறது. இதனால் கேரளாவில் பதற்ற சூழல் அதிகரித்துள்ளது. பதற்ற சூழலை கட்டுக்குள் கொண்டு வர, பம்பை, நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று, 144 தடை உத்தரவை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, போராட்டம் வலுத்து வருவதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவசம் போர்டின் தலைவர் பத்மகுமார், சபரிமலையை அரசியல் செய்யும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது. எங்களுக்கு அமைதி வேண்டும். போராட்டம் நடத்தப்படும் இடமாக சபரிமலையை ஆக்க வேண்டாம். இதற்கு முடிவுகட்ட சீராய்வு மனுத் தாக்கல் செய்ய உள்ளோம் என்றார்.