சபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு பேச்சுவார்த்தை தோல்வி

 

சபரிமலை விவகாரம்: தேவசம்போர்டு பேச்சுவார்த்தை தோல்வி

சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக திருவிதாங்கூர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக திருவிதாங்கூர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும் அறிவித்திருந்தாலும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள், பந்தளம் அரண்மை, ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஐப்பசி மாத பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படவுள்ளது. 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடை திறந்து இருக்கும். அப்போது பெண்களும் கோவிலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண்களை எதிர்க்க பல அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளன. அதிமட்டுமின்றி பெண்கள் கோயிலுக்கு வந்தால் மிகப்பெரிய வன்முறை வெடிக்கும் என தலைமை தந்திரி எச்சரித்திருக்கிறார். 

இந்நிலையில், பேச்சுவார்த்தை மூலம் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்ட திருவிதாங்கூர் தேவசம் போர்டு, இந்து அமைப்பினர், பந்தள மன்னர் குடும்பத்தினர், ஐயப்ப சேவா சங்கம், தந்திரி குடும்பத்தினருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. 

ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என பந்தளம் அரச குடும்பத்தினர் கூட்டத்தில் பேசியதாகவும், நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய தேவசம்போர்டு மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், எந்த முடிவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.