சபரிமலை வன்முறை: கேரள ஆளுநரிடம் முதல்வர் பினராயி அறிக்கை தாக்கல்

 

சபரிமலை வன்முறை: கேரள ஆளுநரிடம் முதல்வர் பினராயி அறிக்கை தாக்கல்

சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான இரு பெண்கள் நுழைந்ததையடுத்து, ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கேரள ஆளுநர் சதாசிவத்திடம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்

திருவனந்தபுரம்: சபரிமலையில் 50 வயதுக்கு குறைவான இரு பெண்கள் நுழைந்ததையடுத்து, ஏற்பட்ட வன்முறை தொடர்பாக கேரள ஆளுநர் சதாசிவத்திடம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது, பிந்து, கனகதுர்கா ஆகிய 50 வயதிற்குட்பட்ட இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பினர்.

கேரளா முழுவதும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கேரள அரசைக் கண்டித்து இந்து அமைப்பினர், பாஜக-வினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் போது, சாலைகளில் டயர்களை எரித்தும், கிரானைட் கற்களை கொண்டு தடை ஏற்படுத்தியும் போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கினர். சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கற்களை வீசி தாக்கினர். மேலும் பல இடங்களில் கடைகளின் ஷட்டர்களை இறக்கி வலுக்கட்டாயமாக மூடினர். சில கடைகள் அடித்தும் நொறுக்கப்பட்டன. பாஜக – மார்க்சிஸ்ட் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வன்முறையில் ஈடுபட்டதாக, மாநிலம் முழுவதும், 750-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டக்காரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 21 காவலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும், இன்று வரை போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

இந்நிலையில், மாநிலத்தில் நிலவும் வன்முறை குறித்தும், வன்முறையை தடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் அறிக்கை கோரியிருந்தார். இதையடுத்து, சபரிமலை வன்முறை குறித்து ஆளுநரிடம் கேரள முதல்வர் பினராயி விஜயன்  அறிக்கை அளித்துள்ளார். அதில், வன்முறை தொடர்பாக 2012 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில், 9,489 பேர் சங்பரிவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.