சபரிமலை புத்த கோவிலா? அதனால் தான் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

 

சபரிமலை புத்த கோவிலா? அதனால் தான் பெண்கள் புறக்கணிக்கப்படுகிறார்களா?

சபரிமலை புத்தமத கோவில். அதனால் தான் பெண்கள் அங்கு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பிரபல உளவியல் நிபுணர் ஷாலினி கூறியுள்ளார்.

சென்னை: சபரிமலை புத்தமத கோவில். அதனால் தான் பெண்கள் அங்கு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று பிரபல உளவியல் நிபுணர் ஷாலினி கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் சன்னதிக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள், ஐயப்ப பக்தர்கள் தொடர்ச்சியாக நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.ஆனாலும் பெண்களை கோவிலுக்குள் அனுப்பக் கேரள அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது. 

இது குறித்து மனநல மருத்துவர் ஷாலினியிடம் நாம் கேட்டபோது அவர் கூறியதாவது;-  ‘சபரிமலை பெரிய ஒரு விஷயம், அதில் பல கூறுகள் இருக்கின்றன. முதல் விஷயத்தை எடுத்துக்கொண்டால், ஊரை விட்டு அது காட்டு பகுதியில் இருக்கின்ற, ஆண்களாலையே  எளிதாக  போக முடியாத தூரத்தில் இருந்த ஒரு கோவில். அது எந்த மதத்தின் கோவில் என்றால் புத்தமதத்தை சேர்ந்த ஒரு கோவில். அதற்காக தான் அது தர்ம சாஸ்தா என்று சொல்லப்படுகிறது. புத்த மதம் எப்படி பட்ட மதம் என்று பார்த்தால் புத்தமதம் பெண்களை இழிவு செய்கின்ற ஒரு மதம்தான். புத்த மதத்தில் பெண்கள் ஞானமெல்லாம் பெற முடியாது , அதற்காக கூறுகளே பெண்களிடம் இல்லை என்று சொல்வது புத்த மதம். இது ஒருபுறமிருக்கட்டும். இன்னொரு பக்கம் பார்த்தீங்கன்னா… இயற்கையில் குழந்தைகள் எப்படி பிறக்குறாங்கன்னா பெண்களை விட ஆண்கள் அதிக எண்ணிக்கையில் பிறக்குறாங்க.

ஏன் அப்படி  பிறக்குறாங்கன்னா பெண் இன்றியமையாதவள். பெண்ணே இல்லாத உலகத்தில் குழந்தை குட்டிங்க பிறக்காது. இந்த இனமே அழிஞ்சிடும் அதனால பெண் இன்றியமையாதவள். இயற்கைக்கு முக்கியமானவன்.ஆண்கள் செலவிடக்கூடியவர்கள். போருக்கு ஆண்களை தான் அனுப்புவோம்,போருக்கு பெண்களை அனுப்பி அவனை கொன்றுவிட்டு வா அப்படினு சொல்ல மாட்டோம். அப்படி அனுப்பினா அனுப்புறவங்களுக்கு ஆண்மை இல்லைனு அர்த்தமாகிடும். ஆண் அதிகமாக இருக்குற காலகட்டத்துல, கலாச்சார ரீதியில் ஆண்களுக்கான ஒரு இடத்தை தரணும். அந்த இடத்தை மதம் மட்டும் தான் தந்தது. அதனால் ஆண்களை மதத்து பக்கம் அனுப்பிவிட்டாங்க. ஊழியம் பண்ண போங்கன்னு அனுப்பிட்டாங்க. அப்படி போனவங்க பிரம்மச்சரியத்தை கடைப்பிடிச்சாங்க. பெண்களுடைய வாசனை வந்தாலே அவங்க பிரம்மசரியம் கேட்டு போய்டும்ன்னு நினைத்தார்கள். அதனால் பெண்கள் வரக்கூடாது அவங்க  வந்தா ஹார்மோன் பிரச்னை வரும், அதனால நாங்க ஒளிஞ்சிக்குறோம் அப்படிங்குற லெவெலில் தான் அப்போ ஆண்களை நாம் அணுகினோம்’ என்கிறார்.

‘ஆனால் இப்போது சபரிமலை எப்படி மாறிவிட்டது என்றால் அது காட்டுக்குள்ள இல்லை. அது ஊராகிவிட்டது. அங்க சின்ன குழந்தைகள் கூட பாதுகாப்பாக போய்ட்டு வர முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது.அங்க போயிட்டு வருவது பெரிய வீர செயலெல்லாம் கிடையாது.சும்மா சாதாரணமாவே போயிட்டு வந்துடலாம். அந்த பார்முலாவே மாறிடுச்சு. இப்போ பெண்களை அனுமதிக்க கூடாது என்பதற்காக அவங்க என்ன மாதிரியான காரணத்தை முன்வைக்குறாங்க..பெண்களுக்கு மாதவிடாய் என்ற ஒன்று வருது இல்லையா? அதனால் பெண்கள் அசுத்தமானவர்கள் இல்லையா  என்று சொல்கிறார்கள். பெண் உடம்பில் இருந்து வந்துட்டு நன்றி கேட்ட மாதிரி பேசுறீங்களே என்று பெண்கள் கேள்வி கேட்குறாங்க. அது பெண்களின் சுயமரியாதை பிரச்னையாக மாறி விடுகிறது. அதனால் அவர்கள் அங்கு போய் தீர்வு கேட்குறார்கள். தீர்வுக்கு அவர்கள் என்ன விளக்கமளித்திருக்க வேண்டும்? நாங்களெல்லாம் துறவிமார்கள் இல்லையா பெண்கள் வந்தால் எங்கள் பிரம்மசரியம் கெட்டுவிடும் என்று கூறியிருந்தால், இது இவ்வளவு பெரிய பிரச்னையாக மாறியிருக்காது. ஆன்மீகம் சம்பந்தமான பிரச்னையாக மாறியிருக்கும். அதைவிட்டுவிட்டு பெண் தூய்மையானவள் இல்லை என்று சொல்லும் போது தான் அது தீண்டாமை பிரச்னையாகிவிடுகிறது.  அதை கருத்தில் வைத்து தான்  நீதிபதி சட்டத்திற்கு முன்பு அனைவரும் சமம். ஆண் பெண் பாகுபாடு இல்லை என்று கூறி தீர்ப்பளித்துள்ளார். ஆனால் தொடர்ந்து அவர்கள் இந்துமத கோட்பாட்டை தான் முன்வைக்கிறார்கள். பிரம்மசரியம் தான் பிரச்னை அப்படி அவர்கள் சொல்லிவிட்டாலே, எங்களால் உங்கள் பிரம்மசரியத்திற்கு பாதிப்பு ஏற்பட வேண்டாம் நாங்கள் வரவில்லை என்று பெண்கள் அழகாக சொல்லிவிடுவார்கள். ஆனால் தொடர்ந்து அவர்கள் பெண்களை தூய்மையற்றவள் என்று சொல்லும் போது தான் அங்கு பிரச்னை ஏற்படுகிறது. அவர்கள் போராடுகிறார்கள். ஒன்று சரியான விளக்கமளிக்க வேண்டும். இல்லையென்றால், பெண்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்த வேண்டும்’ என்றார் .