சபரிமலை நடைதிறப்பு: 700 பெண்கள் இணையதளத்தில் முன்பதிவு; வலுக்கும் போராட்டம்!

 

சபரிமலை நடைதிறப்பு: 700 பெண்கள் இணையதளத்தில் முன்பதிவு; வலுக்கும் போராட்டம்!

மகரவிளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறக்கப்படவுள்ளது. இந்த முறை, கோயிலுக்குச் செல்ல 700 பெண்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: மகரவிளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறக்கப்படவுள்ளது. இந்த முறை, கோயிலுக்குச் செல்ல 700 பெண்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்திருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, இரண்டு முறை மாதாந்திர பூஜைக்காக ஓரிரு தினங்கள் மட்டுமே கோயில் நடை திறக்கப்பட்டது. அந்தச் சமயங்களில் கோயிலுக்குச் செல்ல ஒரு சில பெண்ணிய ஆர்வலர்களும், இளம்பெண்களும் மேற்கொண்ட முயற்சி பக்தர்களின் போராட்டம் காரணமாக முறியடிக்கப்பட்டது.இதற்கிடையே, தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட போதிலும், முந்தைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. 

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தீர்ப்பை அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றத்திடம் கால அவகாசம் கோருமாறு காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்த கோரிக்கையை பினராயி விஜயன் ஏற்கவில்லை. ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை செயல்படுத்த அரசு உறுதியுடன் இருப்பதாகவும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தகைய சூழலில், மகரவிளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. இந்த முறை இரண்டு மாத காலத்துக்கு நடை திறக்கப்பட்டிருக்கும். இதனால் கோயிலுக்கு செல்வதற்காக 700 பெண்கள் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் தரிசனம் செய்வதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா தெரிவித்தார். அதேசமயம், சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடையாணை அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.