சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு உண்டா? கேரள முதல்வரின் பதில் இதுதான்!

 

சபரிமலை தீர்ப்பில் மேல்முறையீடு உண்டா? கேரள முதல்வரின் பதில் இதுதான்!

சபரிமலை அய்யப்பன் கோவில் தரிசனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தங்களின் நிலைபாட்டை கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் தரிசனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து தங்களின் நிலைபாட்டை கேரள முதல்வர் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் சபரிமலையில் அய்யப்பன் கோவில் உள்ளது. அய்யப்பன் நித்திய பிரம்மசாரி என்பதால் இவரை 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் தரிசிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து இந்திய இளம் வக்கீல்கள் சங்கத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் அனைத்து தரப்பு பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற அதிரடி தீர்ப்பை வழங்கியது.

இந்த தீர்ப்பிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பலவேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்வது தொடர்பான அமைச்சரவை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

கூட்டத்திற்கு பின் பேசிய கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட மாட்டாது என்றும், இனி சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுக்கவும் முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 17-ந்தேதி ஐப்பசி மாத பிறப்பின் போது நடை திறக்கப்படுகிறது. மறுநாள் 18-ந்தேதி காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

மேலும், முதல்வரின் இந்த அறிவிப்பையடுத்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வருகிற 18-ந்தேதி முதல் பெண் பக்தர்களையும் சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டிய கட்டாயம் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.