சபரிமலை தந்திரி பதவி விலகியிருக்க வேண்டும்: கெத்து காட்டும் பினராயி விஜயன்

 

சபரிமலை தந்திரி பதவி விலகியிருக்க வேண்டும்: கெத்து காட்டும் பினராயி விஜயன்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காவிட்டால் சபரிமலை தந்திரி பதவி விலகியிருக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்காவிட்டால் சபரிமலை தந்திரி பதவி விலகியிருக்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்டத்தையும் மீறி பிந்து, கனகதுர்கா என்ற இரு பெண்கள் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர். இதைத்தொடர்ந்து தந்திரி கண்டரரூ ராஜீவரூ, கோயிலின் நடையை அடைத்து பரிகார பூஜைகள் மேற்கொண்டார்.

மேலும் கேரளாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.இருப்பினும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த பினராயி உறுதியோடு இருக்கிறார். முதல்வர் பினராயி விஜயன் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்த போராட்டக்காரர்கள் முயற்சித்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இந்நிலையில், பரிகார் பூஜைகள் மேற்கொண்டது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், சபரிமலையில் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. கோயிலின் நடையை அடைத்து தந்திரி பரிகார பூஜை செய்துள்ளார். இது உச்ச நீதிமன்றத்தின்தீர்ப்புக்கு எதிரானதாகும். இந்த வழக்கில் அவரும் ஒரு வாதி என்பதால், அவரது கருத்தையும் கேட்டே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தந்திரி ஏற்காவிட்டால் அவர் பதவி விலகியிருக்க வேண்டும் என்றார்.