சபரிமலை சீராய்வு மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

 

சபரிமலை சீராய்வு மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அறிவித்துள்ள கேரள அரசும், திருவிதாங்கூர் தேவசம்போர்டும், இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி நவம்பர் 16-ம் தேதி முதல் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து நாயர் சேவா சமூகத்தினர் மற்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.