சபரிமலை: சீராய்வு மனுக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை முடிவு

 

சபரிமலை: சீராய்வு மனுக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை முடிவு

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த முடிவை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது

டெல்லி: சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த முடிவை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, கேரளா மாநிலத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் ஐப்பசி மாத பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டது. அப்போது, பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெண்கள் வருகைக்கு எதிராக அங்கு நடைபெற்ற போராட்டத்தால் பெரும் பதற்றம் நிலவியது. எதிர்ப்பையும் மீறி கோயிலுக்கு வந்த பெண்கள் போராட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது. அத்துடன் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தேவசம் போர்டு அறிவித்தது.

இதனிடையே, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து நாயர் சேவா சமூகத்தினர் மற்றும் தேசிய ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் அவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது. அதுதவிர இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 20-க்கும் மேற்பட்ட சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்கலாமா என்பது குறித்த முடிவை உச்ச நீதிமன்றம் நாளை அறிவிக்கிறது.