சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு: போலீசார் குவிப்பு

 

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு: போலீசார் குவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ள நிலையில், எதிர்ப்பு காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படவுள்ள நிலையில், எதிர்ப்பு காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கேரளாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழிபாட்டு நாட்களின் போது பெண்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில், நேற்று கூடிய ஐயப்ப பக்தர்கள், அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும், கோயிலுக்குள் பெண்கள் வருவதை தடுக்க நிலக்கல் பகுதியில் இந்து அமைப்புகளை சேர்ந்த ஏராளமானோர் குவிந்துள்ளனர். அதேபோல், சபரிமலையில் பெண்கள் நுழைந்தால் வன்முறை வெடிக்கும் என தலைமை தந்திரி மகேஷ்வரரு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சட்டத்தை மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.

இத்தகைய பரபரப்பான சூழலில், ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுவதால், கேரள மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.