சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற கனகதுர்கா அரசு விடுதியில் தஞ்சம்

 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற கனகதுர்கா அரசு விடுதியில் தஞ்சம்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கனகதுர்கா வீட்டை விட்டு விரட்டப்பட்டதால் அரசு விடுதியில் தஞ்சம் அடைந்துள்ளார்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பிய கனகதுர்கா வீட்டை விட்டு விரட்டப்பட்டதால் அரசு விடுதியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது, பிந்து, கனகதுர்கா ஆகிய 50 வயதிற்குட்பட்ட இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பினர். இரு பெண்கள் சென்ற தகவல் வெளியானதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு பெண்களுக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாக தெரிகிறது. எனவே, இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் தங்கள் கட்டுப்பாட்டில் போலீசார் வைத்திருந்தனர்.

இதனையடுத்து கனகதுர்கா தனது வீட்டிற்கு சென்றபோது மாமியாரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார். அதேசமயம், அவரது மாமியாரும் தன்னை கனகதுர்கா தாக்கியதாக புகார் கூறினார். இதனிடையே, தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கனகதுர்கா, பிந்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

இந்நிலையில், கனகதுர்கா மீண்டும் தனது மாமியார் வீட்டிற்கு சென்றபோது குடும்பத்தினர் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்துள்ளனர். இதையடுத்து, பெரிந்தலமன்னா பகுதியில் உள்ள அரசு விடுதியில் கனகதுர்கா தஞ்சம் அடைந்துள்ளார்