சபரிமலையில் பெண்கள் வழிபட்ட பிறகு பரிகார பூஜை: உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

 

சபரிமலையில் பெண்கள் வழிபட்ட பிறகு பரிகார பூஜை: உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட்ட பிறகு பரிகார பூஜை செய்யும் நடவடிக்கையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது

புதுதில்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட்ட பிறகு பரிகார பூஜை செய்யும் நடவடிக்கையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது, பிந்து, கனகதுர்கா ஆகிய 50 வயதிற்குட்பட்ட இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பினர். இரு பெண்கள் சென்ற தகவல் வெளியானதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு பெண்களுக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என இரு பெண்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரண்டு பெண்களுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், பெண்கள் வழிபட்ட பிறகு பரிகார பூஜை செய்வதற்கு தடை விதிக்குமாறு கனகதுர்கா, பிந்து ஆகியோர் தங்களது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இந்த நடவடிக்கையில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.