சபரிமலையில் பெண்கள் தரிசனம்… தமிழகத்தில் இருக்கும் கேரள விருந்தினர் மாளிகை மீது தாக்குதல்

 

சபரிமலையில் பெண்கள் தரிசனம்… தமிழகத்தில் இருக்கும் கேரள விருந்தினர் மாளிகை மீது தாக்குதல்

சபரிமலையில் 2 பெண்கள் நேற்று தரிசனம் செய்ததற்கு எதிராக சென்னையில் இருக்கும் கேரள விருந்தினர் மாளிகை மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: சபரிமலையில் 2 பெண்கள் நேற்று தரிசனம் செய்ததற்கு எதிராக சென்னையில் இருக்கும் கேரள விருந்தினர் மாளிகை மீது மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலைக்கு பெண்கள் செல்லக்கூடாது என இந்து அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்ட நடத்தும் போராட்டங்களையும் மீறி, பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் ஐயப்பன் சன்னிதானம் சென்று வரலாற்றில் இடம்பெற்றுள்ளனர். இதனையடுத்து இந்து அமைப்பினர், பாஜகவினர் உள்ளிட்டோர் கேரளாவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைமை செயலகத்தில் இருந்த சென்ற அம்மாநில முதல்வர் பினராயி விஜயனின் வாகனத்தையும் அவர்கள் தாக்குவதற்கு முயற்சி செய்தனர்.

இந்நிலையில், கேரளா போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் செயல்பட்டு வரும் கேரள விருந்தினர் மாளிகை மீது மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 

இதனையடுத்து இந்த தாக்குதல் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் முயன்று வருகின்றனர். மேலும், இவ்விவகாரம் தொடர்பாக ஆயிரம் விளக்கு பகுதி இந்து முன்னணி தலைவர் பார்த்தசாரதி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.