சபரிமலையில் ஏன் பரிகார பூஜை? – தந்திரி விளக்கம்

 

சபரிமலையில் ஏன் பரிகார பூஜை? – தந்திரி விளக்கம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பரிகார பூஜை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தந்திரி கண்டரரு ராஜீவரு தேவசம் போர்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பரிகார பூஜை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தந்திரி கண்டரரு ராஜீவரு தேவசம் போர்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்ட போது, பிந்து, கனகதுர்கா ஆகிய 50 வயதிற்குட்பட்ட இரு பெண்கள் சபரிமலைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஐயப்பனைத் தரிசித்துவிட்டு திரும்பினர். இரு பெண்கள் சென்ற தகவல் வெளியானதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டு, பரிகார பூஜைகளுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

தலைமை தந்திரி கண்டரூ ராஜீவரு இந்த பரிகாரப் பூஜையை நடத்தினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த பரிகார பூஜை உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் கண்டனங்கள் எழுந்தன.

இதுகுறித்து தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறும் போது, தந்திரியிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும், அதற்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பரிகார பூஜை செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து தந்திரி கண்டரரு ராஜீவரு தேவசம் போர்டுக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில், இரண்டு பெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்ததாக கூறுவது ஆதாரமற்றது. பரிகார பூஜை தொடர்பாக தேவசம் போர்டிடம் அனுமதி கேட்க வேண்டிய தேவையில்லை. எனினும், அந்த சமயத்தில் அங்கு இருந்த தேவசம் போர்டு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விட்டு தான் பரிகார பூஜை செய்யப்பட்டது.

சித்திர ஆட்ட விழா மற்றும் மண்டல மகரவிளக்கு விழா காலங்களில் பல பிரச்னைகளை ஐயப்பன் கோயில் சந்தித்ததால், கோயிலின் புனித தன்மையை காக்க பரிகார பூஜை செய்யப்பட்டது.  டிசம்பர் 31-ம் தேதி பூஜை நடை பெறவில்லை. ஜனவரி 1-ம் தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் தான் ஜனவரி 2-ம் தேதி பரிகார பூஜை செய்யப்பட்டது. என்று கூறப்பட்டுள்ளது.