சபரிமலைக்கு பெண்கள் அனுமதி எப்போது? தேவசம்போர்டு அறிவிப்பு

 

சபரிமலைக்கு பெண்கள் அனுமதி எப்போது? தேவசம்போர்டு அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் எப்போதில் இருந்து அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் எப்போதில் இருந்து அனுமதிக்கப்படுவர் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்தது. இந்த தீர்ப்பிற்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. தீர்ப்பு குறித்து மத தலைவர்களுடன் கலந்தாலோசித்து சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மநாபன் தெரிவித்திருந்தார். இதற்கிடையே சபரிமலை வரும் பெண்களுக்கு தனி வரிசை இல்லை என்பன உள்ளிட்ட புதிய விதிமுறைகளை தேவசம்போர்டு அறிவித்திருந்தது.

இதனையடுத்து பத்மநாபன் தலைமையில் தீர்ப்பு குறித்து நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யபோவதில்லை என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பத்மநாபன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் முதல் பெண்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதலாக 600 கழிப்பறைகளும், ஓய்வறைகளும் கட்டப்படும். மழை வெள்ளப்பெருக்கின் போது பம்பையை கடந்து சன்னிதானம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனை கருத்தில் கொண்டு பம்பை மலை உச்சி முதல் கணபதி கோயில் வரை ரூ.25 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்படும்.

கேரளாவில் தற்போது மழை வெள்ள சேத பணிகள் நடந்து வருவதாலும், பெண்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது இருப்பதாலும் இம்மாதம் 17-ம் தேதி நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்கு பெண்களை அனுமதிக்க வாய்ப்பு இல்லை.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு வரும் பெண்களை நாங்கள் தடுக்கவும் மாட்டோம். பெண்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து முடித்த பிறகு நவம்பர் 16-ம் தேதிமண்டல பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அன்று முதல் சபரிமலைக்கு பெண்கள் வந்து ஐயப்பனை தரிசிக்கலாம் என்றார்.