சபரிமலைக்கு செல்ல முயன்ற 11 பெண்கள் தடுத்து நிறுத்தம்: பக்தர்களுடன் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு!

 

சபரிமலைக்கு செல்ல முயன்ற 11 பெண்கள் தடுத்து நிறுத்தம்: பக்தர்களுடன் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு!

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்ற 11 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்ற 11 பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்ல விரும்பும் பெண்களை ஒருங்கிணைத்து ‘மனிதி’ என்ற  அமைப்பு சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்தது. மேலும், சபரிமலைக்கு வருவதையொட்டி தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள அரசுக்கு மனிதி அமைப்பினர் கடிதமும் எழுதினர்.

sabarimala

இதனையடுத்து, சென்னையை சேர்ந்த 11 பெண்கள் பம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது அவர்களை அய்யப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்களை அனுமதிக்கக்கூடாது என பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 11 பெண்களும் மலை ஏறத் தொடங்கினர்.

police

ஆனால், அவர்கள் கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில், பக்தர்களின் போராட்டம் வன்முறையாக மாறியதால், அவர்களை திருப்பின் அனுப்ப போலீசார் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, தடுத்து நிறுத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 11 பெண்களும், அங்கிருந்து நேரே மதுரைக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ‘மனிதி’ அமைப்பைச் சேர்ந்த செல்வி என்பவர் கூறுகையில், பக்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் போலீசார் தங்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியதாகவும், சபரிமலைக்கு நிச்சயமாக மீண்டும் செல்வோம் என்றும் தெரிவித்தார்.