சபரிமலைக்கு சென்ற பெண்ணியவாதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு: போராட்டக்காரர்களால் செய்வதறியாமல் தவிப்பு!

 

சபரிமலைக்கு  சென்ற பெண்ணியவாதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்பு: போராட்டக்காரர்களால் செய்வதறியாமல் தவிப்பு!

சபரிமலைக்கு செல்ல முற்பட்ட பெண்ணியவாதி திருப்தி தேசாய்க்கு வாகனம் தர முடியாது என்று டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால் அவர் விமானநிலையத்தில் முடங்கியுள்ளார்.

கொச்சி : சபரிமலைக்கு செல்ல முற்பட்ட பெண்ணியவாதி திருப்தி தேசாய்க்கு வாகனம் தர முடியாது என்று டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கத்தினர் முடிவெடுத்துள்ளனர். இதனால் அவர் விமானநிலையத்தில் முடங்கியுள்ளார்.

மகரவிளக்கு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது. இந்த முறை இரண்டு மாத காலத்துக்கு நடை திறக்கப்பட்டிருக்கும். இதனால் கோயிலுக்கு செல்வதற்காக 700 பெண்கள் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் தரிசனம் செய்வதற்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளரான திருப்தி தேசாய், 6 பெண்களுடன் வரும் 16-ஆம் தேதி கேரளாவிற்கு வந்து 17-ஆம் தேதி சபரிமலைக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தார். எனவே கேரள அரசு தங்களுக்கு பாதுகாப்பு மற்றும் பயண வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பிரதமர், கேரள மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர்கள், கேரளா டி.ஜி.பி., ஆகியோருக்குக் கடிதம் அனுப்பினார்

இந்நிலையில் இன்று காலை சபரிமலை செல்வதற்காக திருப்தி தேசாய் தனது குழுவினருடன் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தார். இதனையடுத்து விமான நிலையத்தில் திருப்தி தேசாய்க்கு பலத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. விமான நிலைய வாசலில் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் திருப்தி தேசாய்க்கு எதிராக போராட்டமும் கோஷமும் எழுப்பினர். மேலும், கொச்சி விமான நிலைய டாக்ஸி ஓட்டுநர்களும் திருப்தி தேசாய்க்கு வாகனம் தர முடியாது என முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவை கொச்சி விமான நிலைய டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாமல் திருப்தி தேசாய் குழுவினர் செய்வதறியாமல் இருந்து வருகின்றனர்.

பெண்ணியவாதியான திருப்தி தேசாய்தான் 2016 ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்னாபூரில் உள்ள சனிபகவான் கோவிலுக்குப் பெண்களை அழைத்துச் சென்று புரட்சி செய்தவர். அதற்கு முன்பு வரை அந்தக் கோவிலில் 60 ஆண்டுகள் பெண்களை அனுமதிக்கவில்லை. இப்போது சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் இத்தகைய முயற்சியைத் திருப்தி தேசாய் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.